கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடுதிரை கணினி வசதி


கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடுதிரை கணினி வசதி
x
தினத்தந்தி 12 Oct 2018 4:00 AM IST (Updated: 12 Oct 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள், வக்கீல்கள் பயன்பாட்டிற்காக தொடுதிரை கணினி வசதி திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள தொடுதிரை கணினி வசதியை நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி கலாவதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மக்கள் நீதிமன்ற தலைவர் அறிவொளி, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அன்புச்செல்வி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியன், இலவச சட்ட உதவி மைய செயலாளரும், சார்பு நீதிபதியுமான தஸ்னீம், முதன்மை சார்பு நீதிபதி மோனிகா, சிறப்பு சார்பு நீதிபதி லீலா, கிருஷ்ணகிரி ஜே.எம்.1 நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சுல்தான் அர்பீன், ஜே.எம்.2 நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஜெயப்பிரகாஷ் மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த தொடுதிரை கணினி வசதி குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி கலாவதி கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முறையாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனுதாரர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினி வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடுதிரை கணினி வசதியை இலவசமாக பயன்படுத்தி, வழக்கு சம்பந்தமாக நீதிமன்றங்களுக்கு வருகை தரும் மனுதாரர்கள், வக்கீல்கள், சாட்சிகளாக வருகிற, ஆதரவு தரப்பினராக வருகிற பொதுமக்கள், தங்கள் சம்பந்தப்பட்ட, தாங்கள் அறிய வேண்டிய வழக்குகளின் நிலைமை, வாய்தா தேதி போன்றவற்றை அன்றன்றே உடனுக்குடன் தொடுதிரை கணினி வசதியை முழுமையாக பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.

இந்த மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மாவட்ட மகிளா நீதிமன்றம், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளிட்ட 13 நீதிமன்றங்கள் உள்ளடங்கி உள்ளன. இவைகளின் அன்றாட நடைமுறைகள் பதிவேற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story