ஆசிரியையை ஏமாற்றி ரகசிய திருமணம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


ஆசிரியையை ஏமாற்றி ரகசிய திருமணம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2018 5:31 AM IST (Updated: 12 Oct 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆசிரியை ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனி டம் புகார் மனு ஒன்றினை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

நான் எம்.எஸ்சி., பி.எட். படித்து முடித்துவிட்டு திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன். நான் காங்கேயத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியில் படித்தபோது, என்னுடன் படித்த முத்தூர் பெருமாள் கோவில் புதூரை சேர்ந்த கவின்குமார் (வயது28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி பெருந்துறை கம்புளியம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நானும், கவின்கு மாரும் ரகசிய திருமணம் செய்து கொண்டோம்.

இதையடுத்து கவின்குமார் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் கணவன், மனைவியாக நாம் வாழலாம் என்று என்னிடம் கூறினார். அதற்கு, நாம் சட்டப்படி திருமணம் செய்துகொள் ளலாம் என்றேன். உடனே அவர் என் மீது நம்பிக்கை இல்லையா? என்று கூறியதுடன் கண்டிப்பாக சட்டப்படி திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை வார்த்தை கூறி என்னிடம் உல்லாசம் அனுபவித்தார். அதன்பின்னர் என்னை ஏற்காடு, கொல்லிமலை ஆகிய பகுதிகளுக்கும் அழைத்து சென்றார்.

இந்த நிலையில் கவின்கு மாரின் செல்போன் திடீரென ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்ததால் கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி நான் அவருடைய வீட்டிற்கு சென்றேன். அங்கு எனது கணவர் கவின்குமார், அவருடைய தாய் தேவி, தம்பி கணேஷ்குமார், தாய் மாமா சேகர், தாய்மாமா மனைவி வளர்மதி ஆகியோர் என்னை சாதி பெயரை சொல்லி திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே என்னை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிய கவின்குமார் மற்றும் அவருடைய குடும்பத் தினர் மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் ஆசிரியை கூறிஇருந்தார்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், ஈரோடு மகளிர் போலீசாரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில் கவின்குமார், தேவி, கணேஷ்குமார், சேகர், வளர்மதி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கவின்குமாரை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் நேற்று ஈரோடு பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

Next Story