சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: தர்மபுரியில் அய்யப்ப பக்தர்கள் கண்டன ஊர்வலம்


சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: தர்மபுரியில் அய்யப்ப பக்தர்கள் கண்டன ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:30 PM GMT (Updated: 12 Oct 2018 5:31 PM GMT)

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் அய்யப்ப பக்தர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.

தர்மபுரி,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் அய்யப்ப பக்தர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழக அய்யப்ப பக்தர்கள் பேரவையின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் தர்மபுரியில் நேற்று கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி சாலை விநாயகர் கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு தமிழக அய்யப்ப பக்தர்கள் பேரவையின் நிறுவன தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக நடந்த இந்த ஊர்வலம் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே முடிவடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கேரள அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். சபரிமலையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும். 10 வயது முதல் 50 வரை உள்ள பெண்களை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிக்ககூடாது. புனித தீர்த்தமான பம்பை நதியில் பெண்களை குளிக்க அனுமதிக்கக்கூடாது. கேரள அரசு எந்தவித தாமதமும் இன்றி இந்த பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் உலக இந்து மிஷன் தலைவர் காவேரிவர்மன், குருசாமிகள் வேதகிரி, கைலாசம், முருகேசன், சுகுமார், மாதையன், சண்முகம், மாது, குட்டிமணி, பூஞ்சோலை, பழனி உள்பட ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராஜா நன்றி கூறினார்.

Next Story