தேனியில் 125 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


தேனியில் 125 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Oct 2018 9:45 PM GMT (Updated: 12 Oct 2018 5:39 PM GMT)

தேனியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்து இருந்த 125 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேனி,

தேனி பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்.கே.நாடார் தெருவில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகுணா தலைமையில், தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் ஆகியோர் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த குடோனில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சுமார் 125 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1¼ லட்சம் ஆகும்.

விசாரணையில் அந்த குடோன் தனியார் வங்கி ஊழியர் ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதை அரண்மனைப்புதூரை சேர்ந்த பூந்திராஜன் என்பவர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். காகித தம்ளர்கள், பைகள் வைப்பதற்காக குடோனை வாடகைக்கு எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு சில்லறையில் பூந்திராஜன் விற்பனை செய்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பதுக்கி வைத்து இருந்த புகையிலை பொருட் களை பறிமுதல் செய்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மாதிரி எடுத்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வு முடிவை தொடர்ந்து குடோனை வாடகைக்கு எடுத்து இவற்றை பதுக்கி வைத்து இருந்த பூந்திராஜன் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்’ என்றனர்.

Next Story