சப்–கலெக்டர் அலுவலகத்துக்கு நாய்கள் கடித்து குதறிய ஆட்டுடன் வந்த விவசாயி


சப்–கலெக்டர் அலுவலகத்துக்கு நாய்கள் கடித்து குதறிய ஆட்டுடன் வந்த விவசாயி
x
தினத்தந்தி 12 Oct 2018 10:15 PM GMT (Updated: 12 Oct 2018 6:55 PM GMT)

சப்–கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயி ஒருவர் நாய்கள் கடித்து குதறிய ஆட்டுடன் வந்தார்.நடவடிக்கை எடுக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியை அடுத்த அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் சந்தானம். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது ஆட்டை கடித்து விட்டன. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று தெரிகிறது. இதற்கிடையில் மீண்டும் ஒரு ஆட்டை நாய்கள் கடித்து குதறியது.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்தானம் நாய்கள் கடித்த ஆட்டை ஒரு பையில் போட்டு கொண்டு மொபட்டில் சப்–கலெக்டர் அலுவலகத்துக்கு எடுத்து வந்தார். அங்கு இருந்த அதிகாரிகள் வடக்கு ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறிவிட்டனர். இதையடுத்து ஆட்டை தூக்கிக்கொண்டு அவர், ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அதிகாரிகள் யாரும் இல்லை. இதை தொடர்ந்து மீண்டும் சப்–கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஆட்டுடன் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்தனர். இதனை தொடர்ந்து, அங்கிருந்து கிளம்பி சென்றார். இதுகுறித்து விவசாயி சந்தானம் கூறியதாவது:–

எங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் 8 ஆடுகளை வளர்த்து வருகின்றோம். இது தவிர கோழிகளையும் வளர்க்கின்றோம். இந்த நிலையில் தற்போது அனுப்பர்பாளையம் வழியாக கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் அனுப்பர்பாளையத்தில் இருந்து திப்பம்பட்டி செல்லும் சாலையில் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இந்த கழிவுகளை சாப்பிடும் வரும் தெருநாய்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இறைச்சி கழிவுகளை சாப்பிட்டு பழகிய நாய்கள், அந்த கழிவுகள் இல்லாத நேரங்களில் ஆடுகளை கடித்து வருகின்றது. இவ்வாறு நாய்கள் எங்கள் தோட்டத்தில் வளர்த்த 2 ஆடுகளை கடித்து விட்டன. பக்கத்து தோட்டத்துக்காரர் வளர்த்த 11 ஆடுகளையும் கடித்து விட்டன. இதுவரைக்கும் நாய்கள் கடித்து மொத்தம் 12 ஆடுகள் வரை இறந்து விட்டன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியினால் தென்னை மரங்களை காப்பாற்ற முடியவில்லை. சாலைகள் அமைக்க விவசாய நிலங்களை பாதி கையகப்படுத்தி விட்டனர். ஆடு, மாடுகளை வளர்த்து குடும்பத்தை பார்க்கலாம் என்றால், நாய்களால் ஆடுகளை வளர்க்க முடியாத நிலை உள்ளது. கிராமங்களில் செயல்படும் எந்த இறைச்சி கடைகளும் உரிய அனுமதி பெற்று செயல்படுவதில்லை. விதிமுறைகளின்படி இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்துவதும் இல்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு மூட்டை, மூட்டையாக இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர்.

இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் புகார் மனுவை ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதன்பிறகும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போது நாய்கள் வெறிப்பிடித்து சுற்றி திரிந்து வருகின்றன. ஆகவே நாய்களை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும். இல்லையெனில் மனிதர்களை கடிக்க தொடங்கி விடும். மேலும் இதே நிலைமை நீடித்தால் ஆடுகளை வளர்க்க முடியாத நிலை ஏற்படும். மேலும் இறைச்சி கழிவுகளால் நோய்கள் பரவி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் தோட்டத்தில் வளர்த்த 150 கோழி குஞ்சுகள் நோய்வாய் பட்டு இறந்தன. எனவே அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story