தமிழக அரசு மக்களை பற்றி சிந்திப்பது இல்லை - பா.ஜனதா இளைஞரணி மாநில தலைவர் பேட்டி
தமிழக அரசு மக்களை பற்றி சிந்திப்பது இல்லை என்று பா.ஜனதா இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் பேட்டி அளித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி கூட்டம் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் சரத், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். தமிழகத்தில் 67 ஆயிரத்து 654 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு இளைஞர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 4½ ஆண்டு காலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை இந்தியா திட்டம், முத்ரா கடன், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட மானியம், மருத்துவ காப்பீடு திட்டம் போன்றவைகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்து கூறும் வகையில் கூட்டம் நடத்தப்படுகிறது.
மத்திய அரசு வழங்கும் வீடு கட்டுவதற்கான மானிய தொகை வழங்கும் திட்டத்தை, தமிழக அரசே வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை மக்களுக்கு விளக்கும் வகையில் இளைஞர்களை தயார்படுத்தி வருகிறோம். ஐ.நா. சபை மோடிக்கு சுற்றுச்சூழல் விருது வழங்கி கவுரவித்து உள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் வீட்டுக்கு ஒரு கழிப்பிடம், நகர்பகுதிகளில் தூய்மை உள்ளிட்ட திட்டங்களில் மக்கள் தாமாகவே ஈடுபடும் வகையில் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே தூய்மையில் திருச்சி மாவட்டம் 2–ம் இடத்தை பிடித்து உள்ளது.
தமிழகத்தில் மருத்துவத்துறை, உயர்கல்வித்துறை, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் ஊழல் அதிகமாக உள்ளது. மேலும் சட்டம்– ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்க செயல்பட்டு வருகிறோம். தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு ஆட்சியை காப்பாற்றும் வகையில் மட்டுமே செயல்படுகிறது. மக்களை பற்றி சிந்திப்பது இல்லை.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாநில செயலாளர் வசந்தராஜன், ஊட்டி நகர தலைவர் பிரேம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.