பணியில் இருந்தபோது மயங்கி விழுந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திடீர் சாவு


பணியில் இருந்தபோது மயங்கி விழுந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
x
தினத்தந்தி 13 Oct 2018 4:30 AM IST (Updated: 13 Oct 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே பணியில் இருந்தபோது மயங்கி விழுந்து போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் இறந்தார்.

காமநாயக்கன்பாளையம்,

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவரும், சுல்தான் பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரும் நேற்று மாலையில் சுல்தான்பேட்டை பகுதியில் பல்லடம்–பொள்ளாச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த சாலையில் கார் ஓட்டிச்செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து உள்ளனரா? இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெட்மெட் அணிந்து உள்ளனரா? லைசென்சு வைத்துள்ளனரா? மேலும் வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? அந்த வாகனம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா? என்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கரடிவாவியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் கூறினார்கள். இதையடுத்து அவரை கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர். அதற்குள் செந்தில்குமார் இறந்தார். இறந்த போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரின் சொந்த ஊர் கோவையை அடுத்த மதுக்கரை திருமலையம்பாளையமாகும். இவருடைய மனைவி பெயர் காஞ்சனா. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பெங்களூரில் உள்ள கல்லூரியில் மகள் பி.இ. படித்து வருகிறார்.


Next Story