ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்ய வில்லை: ஜெயலலிதாவின் மகள் என்று உரிமைகோரி அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த பெண் அம்ருதா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரிய பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண், அதற்கான மரபணு சோதனை நடத்த வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து வைணவ முறைப்படி இறுதிச்சடங்கு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அம்ருதா தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு உரிமை உள்ளது என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்.
மேலும், சைலஜா என்பவர் தான், ஜெயலலிதாவின் சகோதரி. அவர் தான் பெங்களூருவில் அம்ருதாவை வளர்த்து வந்தார். உச்ச நீதிமன்றத்தில் அம்ருதா தாக்கல் செய்த மனுவுக்கு ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான லலிதா, ரஞ்சினி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் வாதம் வைத்த அரசு தலைமை வக்கீல், ஜெயலலிதாவின் சகோதரி என கூறி பேட்டியளித்த சைலஜா மீது ஜெயலலிதாவே அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அம்ருதாவின் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் கற்பனையானவை. 1980 ஆகஸ்டு மாதம் அம்ருதா பிறந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜெயலலிதா கலந்துகொண்டார். அதற்கான வீடியோ ஆதாரங்களும் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது. அந்த வீடியோ காட்சியில் அவர் கருவுற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை.
மதிப்பு மிக்க தலைவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இறந்த தலைவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். 1996 முதல் 2016–ம் ஆண்டு வரை பல்வேறு தருணங்களில் ஜெயலலிதாவை சந்தித்ததாக கூறும் அம்ருதா, அதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படத்தை கூட தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் அம்ருதா கூறும் அனைத்து சாட்சிகளும் இறந்து விட்டதாக தெரிகிறது. ஜெயலலிதாவின் சொத்துக்களை அடையவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக அரசு வக்கீல் வாதத்தில் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதி வைத்தியநாதன், நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
ஜெயலலிதாவின் மகள் என்பதற்கு அம்ருதா எவ்வித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. ஆவணங்களை தாக்கல் செய்யாததால் மரபணு சோதனைக்கு உத்தரவிட முடியாது. அம்ருதா 1980–ம் ஆண்டு பிறந்ததாக கூறியுள்ளார். ஆனால் 1980–ம் ஆண்டு நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வீடியோவை பார்க்கும் போது ஜெயலலிதா கர்ப்பிணியாக இருந்ததாக தெரியவில்லை.
அம்ருதா ஜெயலலிதாவுடன் வாழ்ந்ததற்காக போட்டோ உள்ளிட்ட எவ்வித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அம்ருதா கோர்ட்டில் தாக்கல் செய்த ஆவணங்கள், கூறிய தகவல்கள் திருவிளையாடல் படக்காட்சிகளை போல் இருக்கிறது.
ஜெயலலிதாவின் உண்மையான ரத்த உறவுகள் தீபா மற்றும் தீபக் மட்டுமே. ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு இவர்கள் இருவர் மட்டும் உரிமை கோர முடியும். அம்ருதா மரபணு சோதனை நடத்தக் கோருவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. குறைந்தபட்ச எந்த ஆதாரமும் இல்லாமல் மரபணு சோதனைக்கு கோர்ட்டு உத்தரவிட முடியாது. தீபாவின் ரத்த மாதிரிகளுடன் மரபணு பரிசோதனை நடத்த வேண்டுமென்றால் அம்ருதா, கீழமை நீதிமன்றத்தை நாடலாம்.
ஜெயலலிதாவின் உறவினரான தீபக் முன்னிலையில் அவர்களின் சம்பிரதாய முறைப்படி இறுதிச்சடங்கை தமிழக அரசு நடத்தியது. எனவே ஜெயலலிதாவின் உடலை மீண்டும் தோண்டி எடுப்பது தேவையற்றது. ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார், உடற்பயிற்சி மேற்கொண்டார் என்று கூறப்பட்ட நிலையில் அம்ருதா, நான் தான் உண்மையான வாரிசு என வழக்கு தொடர்ந்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.
மேலும் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அம்ருதா இது குறித்து ஏன் எங்கும் புகார் செய்யவில்லை. எனவே அம்ருதா பொது விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே அம்ருதா தொடர்ந்த இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.