மணல் திருட்டு வாகனங்கள் விடுவிக்கப்படாது என்ற உத்தரவு நீடிக்கும் - மதுரை ஐகோர்ட்டு அதிரடி


மணல் திருட்டு வாகனங்கள் விடுவிக்கப்படாது என்ற உத்தரவு நீடிக்கும் - மதுரை ஐகோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 13 Oct 2018 4:15 AM IST (Updated: 13 Oct 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

மணல் திருட்டின் போது பிடிபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற உத்தரவு நீடிக்கும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராமன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “இடையாத்திமங்கலம் வெள்ளாறு ஆற்றுப்படுகையில் மணல் குவாரி அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்“ என கூறியிருந்தார். ஏற்கனவே இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கிறது. அனுமதியின்றி இரவு பகலாக மணல் திருட்டில் ஈடுபட்டு இயற்கை வளங்களை சூறையாடுவதால் வருங்காலங்களில் இந்தியாவில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலை உள்ளது என நிதி ஆயோக் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, மணல் திருட்டு வழக்கில், தமிழக உள்துறை செயலாளரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கிறது. மேலும் மணல் திருட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பிடிபட்டால் அபராதம் கட்டிவிட்டு வாகனங்களை எடுத்து செல்கின்றனர்.

எனவே இனிமேல் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பிடிபட்டால் எந்த வாகனமாக இருந்தாலும் திரும்ப ஒப்படைக்க கூடாது. மாட்டு வண்டியாக இருந்தால், மாடுகளை உரிமையாளர்களிடம் கொடுத்து விட்டு வண்டியை பறிமுதல் செய்ய வேண்டும். வாகனங்களை திரும்ப ஒப்படைக்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்தால், அவற்றை விடுவிக்க ஆர்வம் காட்டக்கூடாது. இந்த உத்தரவை உள் துறை செயலாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தி நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்“ என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த மனு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லாரி உரிமையாளர் சங்கங்கள் சார்பில் தங்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க நீதிபதிகளிடம் முறையிட்டனர். அவர்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மணல் திருட்டில் பிடிபட்ட எந்த வாகனமாக இருந்தாலும் திரும்ப ஒப்படைக்கக்கூடாது. மாட்டு வண்டியாக இருந்தால் மாடுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு வண்டியை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு நீடிக்கும் என நீதிபதிகள் கூறினர்.

மேலும் மணல் லாரிகளை விடுவிப்பது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முதன்மை அமர்வில் தான் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என கூறி வழக்கினை வருகிற 22–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story