நடராஜர் ஓவியங்கள் திருட்டு: மேலும் ஒருவர் கைது
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம், பூண்டியில் உள்ள பஜனை மடத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட நடராஜர் ஓவியங்கள் திருட்டுப்போன வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்,
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி பஜனைமடத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட பழமையான விலை உயர்ந்த 2 நடராஜர் ஓவியங்கள் கடந்த 2017-ம் ஆண்டு திருட்டு போனது.
இது குறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓவியங்களை திருடியவர்களை தேடிவந்தனர். இந்த ஓவியங்களை திருடியது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், தங்கம்பேட்டை, சங்கராபுரம் மெயின் ரோடு, வடக்கு தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆறுமுகம் (வயது 32) என்பவரையும், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மேபட்டாம்பாக்கம், கக்கன் காலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் முத்து கிருஷ்ணன்(23) ஆகியோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நெல்லை மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த சித்திரகனி மகன் பழனிச்சாமி(27) என்பவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பழனிச்சாமியை நீதிபதி அய்யப்பன்பிள்ளை வருகிற 26-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் பழனிச்சாமியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story