தாதரில் பட்டப்பகலில், வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


தாதரில் பட்டப்பகலில், வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Oct 2018 5:00 AM IST (Updated: 13 Oct 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

தாதரில், பட்டப்பகலில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மும்பை,

மும்பை தாதர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் மவுர்யா (வயது35). இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று காலை 11 மணியளவில் மனோஜ் மவுர்யா தாதர் சேனாபதி பாபத் மார்க் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து ஒருவர் வந்து கொண்டிருந்தார். திடீரென அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

துப்பாக்கி குண்டு துளைத்ததில் படுகாயம் அடைந்த மனோஜ் மவுர்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் உடனடியாக அங்கு வந்து படுகாயத்துடன் கிடந்த மனோஜ் மவுர்யாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனோஜ் மவுர்யாவை சுட்டுக்கொன்ற கொலையாளி யார்? என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. போலீசார் கொலையாளியை அடையாளம் காண்பதற்காக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story