நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ராகுல் காந்தியுடன் சரத்பவார் ஆலோசனை


நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ராகுல் காந்தியுடன் சரத்பவார் ஆலோசனை
x
தினத்தந்தி 12 Oct 2018 11:15 PM GMT (Updated: 12 Oct 2018 8:25 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.

மும்பை,

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகர்ஜுன கார்கே, அசோக் கெலாட், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்தார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போகும் தொகுதிகள், வேட்பாளர்கள் விவரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

மேலும் இந்த கூட்டத்தில் மராட்டியத்தில் நிலவும் மின்வெட்டு, வறட்சி போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறிய நவாப் மாலிக், இதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Next Story