கொடைக்கானல் பழைய அணையை ரூ.10 கோடியில் தூர்வார நடவடிக்கை பொது நிறுவனங்கள் குழு தலைவர் உறுதி


கொடைக்கானல் பழைய அணையை ரூ.10 கோடியில் தூர்வார நடவடிக்கை பொது நிறுவனங்கள் குழு தலைவர் உறுதி
x
தினத்தந்தி 12 Oct 2018 10:00 PM GMT (Updated: 12 Oct 2018 8:27 PM GMT)

கொடைக்கானல் பழைய அணையை ரூ.10 கோடியில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது நிறுவனங்கள் குழு தலைவர் செம்மலை எம்.எல்.ஏ. கூறினார்.

கொடைக்கானல், 


தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் அமைக்கப்பட்ட பொது நிறுவனங்களின் குழுவினர் அதன் தலைவர் செம்மலை தலைமையில் கொடைக்கானல் வந்தனர். இந்த குழுவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், சண்முகம், பாண்டியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிச்சாண்டி, செழியன், நல்லதம்பி, மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், குழுவின் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணை, மனோரஞ்சிதம் அணை, கீழ்க்குண்டாறு திட்டம், ரோஜா தோட்டம் ஆகியவற்றினை பார்வையிட்டனர்.

அவர்களுடன் நகராட்சி ஆணையாளர் முருகேசன், மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, ஆர்.டி.ஓ. மோகன், தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் சென்று இருந்தனர். ஆய்வுக்கு பிறகு குழுவின் தலைவர் செம்மலை நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடைக்கானல் நகரின் குடிநீர் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் கீழ்க்குண்டாறு திட்டத்திற்கு ரூ.41 கோடியே 36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும். அத்துடன் 2 அணைகளுக்கும் இடையில் ஒரு புதிய தடுப்பணை கட்ட ரூ.10 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு பரிசீலனையில் உள்ளது. இந்த பணியினை நிறுத்திவிட்டு அந்த தொகையின் மூலம் பழைய அணையினை தூர்வாரி உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நிறம் மாறிய ஏரி

பழைய அணையில் கடந்த 1993-ம் ஆண்டு கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் உள்ளது. இதனை மீண்டும் இயக்க குழு பரிந்துரை செய்யும். நட்சத்திர ஏரியில் இரும்பு தாது கலப்பு, ரப்பர் மரக்கிளைகளில் இருந்து வரும் சாயம் காரணமாக நிறம் மாறி விட்டது.

இதனை தூய்மைப்படுத்த 2014-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான திட்ட மதிப்பீடு அரசின் பரிசீலனையில் உள்ளது. ஒப்புதல் கிடைத்த உடன் ஏரி தூர்வாரப்படுவதுடன் ஏரி புதுப்பொலிவாக்கப்படும். கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா மேம்பாடு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயருவதற்காக மத்திய அரசின் சுற்றுலா மேம்பாடு திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து அந்த குழுவினர், கொடைக்கானல் அரசு மருத்துவமனையை பார்வையிட்டனர். அங்கு அரசால் வழங்கப்பட்டு 4 மாத காலமாக பொருத்தப்படாமல் உள்ள சி.டி.ஸ்கேன் எந்திரத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந் தேதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து சித்த மருத்துவர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். அரசு மருத்துவமனையை சுற்றி சுவர் அமைக்க வேண்டும், ஆம்புலன்ஸ் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று பொதுநிறுவனங்கள் குழுவினரிடம் செந்தில்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். இதுகுறித்து பொதுநிறுவனங்கள் குழு பரிசீலனை செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என குழுவின் தலைவர் கூறினார்.

இதேபோல, நேற்று கொடைக்கானல் பகுதியில் உள்ள கிளை நூலகங்களில் சட்டப்பேரவை நூலகக்குழு தலைவர் அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் செலுத்தாமல் இருந்த நூலக வரி நிலுவைத்தொகை ரூ.47 லட்சத்து 7 ஆயிரம், பழனி நகராட்சி சார்பில் ரூ.14 லட்சத்து 10 ஆயிரம், கொடைக்கானல் நகராட்சி சார்பில் 20 லட்சத்து 41 ஆயிரத்து 260 உள்பட உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தாமல் இருந்த நிலுவைத்தொகை ரூ.92 லட்சத்து 50 ஆயிரத்தை குழு தலைவர் அருண்குமாரிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கினர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மனோகர், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story