புதுவை விமான நிலையத்தில் வெங்கையாநாயுடுவிற்கு வரவேற்பு
புதுவை வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுச்சேரி வந்தார். புதுவை விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி, முதல்–அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதா ஆனந்தன், அன்பழகன், அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாரதீய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்க.விக்ரமன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சோமசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் கலையரங்கத்திற்கு வந்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர். விழா முடிந்ததும் மீண்டும் கார் மூலம் விமான நிலையத்துக்கு வந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.