புதுவையில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் - நாராயணசாமி பேச்சு


புதுவையில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் - நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 13 Oct 2018 5:00 AM IST (Updated: 13 Oct 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி உலகப் பொருளாதார உச்சி மாநாடு மற்றும் 5–வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு கோரிமேடு அருகே உள்ள சங்கமித்ரா திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.

இதன் தொடக்க விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரி சிறிய மாநிலம். இங்குள்ள மக்கள் தொகை 14 லட்சம் ஆகும். புதுவையில் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை நடத்துவதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, மொரீசியஸ் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்து செல்கிறார்கள். சுற்றுலாவை மேம்படுத்த நானும், அமைச்சர்களும் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். இதன் மூலம் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் முன்னிலையில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதுச்சேரியில் முதலீடு செய்து வந்தால் முழு பாதுகாப்பு அளிப்பதாக அறிவித்தோம். கர்நாடகா, மராட்டியம் போன்ற பெரிய மாநில அரசுகள் கூட வெளிநாட்டு வாழ் இந்திய முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தயக்கம் காட்டுகின்றனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது புதுவையில் தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை உள்ளது. புதுவையில் சுற்றுலா வேகமாக வளர்ச்சி பெற்று வருவதால் வெளிமாநில, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரலாம். தமிழகத்தை விட சிறந்த பொருளாதார கொள்கைகளை நாங்கள் அறிவித்துள்ளோம்.

புதுவையில் அழகான நீண்ட கடற்கரை, அரவிந்தர் ஆசிரமம் போன்றவை உள்ளது. பலதரப்பட்ட உணவுகள் கிடைக்கும். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் நீர்விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வர உள்ளோம். புதுவையில் தற்போது ரூ.1,850 கோடியில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் கொண்டு வர உள்ளோம். இவ்வளவு சிறப்பு மிக்க புதுச்சேரியில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் கலந்து கொண்ட கயானா நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து பேசியதாவது:–

கயானா நாட்டில் தமிழர்கள் 4 சதவீதம் பேர் உள்ளனர். ஆங்கில காலணி ஆதிக்க காலத்தில் தென் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் அங்கு வசித்து வருகின்றனர். சிறுபான்மையினராக வாழும் தமிழர் ஒருவர் அங்கு பிரதமராக வருவது இதுவே முதல் முறை. சிறுபான்மை தமிழர்கள், ஆப்பிரிக்க இனத்தவர்கள் என சேர்ந்து 6 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். சிறுபான்மையினர் சேர்ந்து போராடினால் வெற்றி பெற முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். கயானா நாட்டில் இயற்கை எரிவாயு வளம் அதிக அளவில் உள்ளது. அதற்கு முதலீடு செய்ய வெளிநாட்டினருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் மொரீசியஸ் ஜனாதிபதி(பொறுப்பு) பரமசிவம் பிள்ளை வையாபுரி பேசியதாவது:–

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு வெட்டுவதற்காக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மொரீசியஸ் நாட்டிற்கு வந்தனர். தற்போது அவர்கள் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளனர். நான் உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டில் 3–வது முறையாக பங்கேற்கிறேன். மொரீசியஸ் நாட்டில் அடிப்படை வசதிகளான சாலை, கல்வி, மருத்துவம் ஆகியவை மேம்பட இந்தியா நிதியுதவி அளித்து வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்தின் வர்த்தக நுழைவாயிலாக மொரீசியஸ் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story