புஷ்கர விழா 2-ம் நாளில் தாமிரபரணியில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்


புஷ்கர விழா 2-ம் நாளில் தாமிரபரணியில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:15 PM GMT (Updated: 12 Oct 2018 9:43 PM GMT)

புஷ்கர விழா 2-ம் நாளில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.

நெல்லை, 

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய தாமிரபரணி மகா புஷ்கர விழா நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் ஏராளமானோர் வந்து புனித நீராடி வழிபட்டனர். மாநிலம் முழுவதும் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள், பொதுமக்கள், சாதுக்கள், துறவிகள் வந்து புனித நீராடினர். தாமிரபரணி ஆற்றில் சிறப்பு ஹோமம், வழிபாடு, ஆரத்தி நடத்தப்பட்டது.

நேற்று 2-வது நாளாக தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் புனித நீராட பக்தர்கள் வந்து குவிந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர். குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், தைப்பூச மண்டபம், குட்டத்துறை, மணிமூர்த்திசுவரம், எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறை உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

நெல்லை தைப்பூச மண்டப படித்துறையில் சிறப்பு பூஜை நடந்தது. நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோலிலில் மக்கள் நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வத்தோடு வாழ வேண்டும் என்று சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க புனிதநீர் எடுத்து வரப்பட்டு தைப்பூச மண்டப படித்துறையில் ஊற்றப்பட்டது. இதில் வேளக்குறிச்சி ஆதீனம், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், திருவாவடுதுறை தம்பிரான்சுவாமி, காமாட்சிபுரி ஆதீனம், சிவபுர ஆதீனம், ஆழ்வார்திருநகரி ஜீயர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ., சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளி முதல்வர் உஷாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புனித நீராடினர்.

நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் நேற்று காலை 9 மணிக்கு ராஜமாதாங்கி யாகம், சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இதில் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி கலந்து கொண்டார். வண்ணார்பேட்டை குட்டத்துறை படித்துறையில் தாமிரபரணி தேவிக்கு சிறப்பு அபிஷேகம், தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நெல்லை அருகே உள்ள கோடகநல்லூரில் உள்ள ரோமச தீர்த்தக்கட்டத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அங்குள்ள அபிமுக்தீசுவரர் சமேத சவுந்திரநாயகி அம்மன் கோவிலிலும், அர்த்தநாரீசுவரர் தட்சணாமூர்த்தி கோவிலிலும் சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தது. இதில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து, ஆற்றில் புனித நீராடினர். ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், அமெரிக்கா, கனடா நாட்டை சேர்ந்தவர்களும் இங்கு வந்து புனித நீராடினர்.

புஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றில் புனித நீராட வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ரெயில்களில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து இறங்கினர். இதனால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து கோடகநல்லூர், முறப்பநாடு, குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. 

Next Story