தென்காசி அருகே: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெயராஜ் தொடங்கி வைத்தார்
தென்காசி அருகே மேலகரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெயராஜ் பேரணியை தொடங்கி வைத்தார்.
தென்காசி,
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய காந்திய இயக்கம், மேலகரம் நகர பஞ்சாயத்து நிர்வாகம், கல்வித்துறை மற்றும் முத்துநாயகம் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மேலகரத்தில் நேற்று காலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய காந்திய இயக்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். தென்காசி முதன்மை சார்பு நீதிபதி நாகராஜன், கூடுதல் சார்பு நீதிபதி திருவேங்கட சீனிவாசன், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி மருதுபாண்டி, மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி பத்மநாபன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு திரிவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெயராஜ் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் இருந்து பேரணி புறப்பட்டு என்.ஜி.ஓ. காலனி, விவேகானந்தர் தெரு, ஆட்டோ நிறுத்தம் வழியாக சென்று, மீண்டும் சமுதாய நலக்கூடத்தை வந்தடைந்தது. பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் சமுதாய நலக்கூடத்தில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், அரசு வக்கீல் கார்த்திக் குமார், வக்கீல் சங்க செயலாளர் மாரியப்பன், அட்வகேட் அசோசியேஷன் செயலாளர் புகழேந்தி, வக்கீல் ராஜா, வட்டார கல்வி அலுவலர்கள் மாரியப்பன், அருள்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன், முத்துநாயகம் அறக்கட்டளை தலைவர் பரமேஸ்வரன், பேராசிரியை விஜயலட்சுமி, நகர பஞ்சாயத்து எழுத்தர் முத்துப்பாண்டி, சுகாதார மேற்பார்வையாளர் தங்கராஜ், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story