பண்ருட்டி அருகே: இளம்பெண் மர்ம சாவு - சப்-கலெக்டர் விசாரணை


பண்ருட்டி அருகே: இளம்பெண் மர்ம சாவு - சப்-கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 12 Oct 2018 10:00 PM GMT (Updated: 12 Oct 2018 10:25 PM GMT)

பண்ருட்டி அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்து கடலூர் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பண்ருட்டி, 


பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் அருள்பீட்டர். இவருடைய மகன் மகிமைதாஸ் (வயது 27). தொழிலாளி. இவருக்கும் உளுந்தூர்பேட்டை அருகே வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்த ஜோசப் மகள் சத்தியமேரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.

திருமணத்தின் போது சத்தியமேரி பெற்றோர் வரதட்சணையாக மகிமைதாசுக்கு 10 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் கட்டில், பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர். இருப்பினும் மகிமைதாசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால், அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வெளிநாட்டுக்கு செல்வதாக கூறி மனைவியிடம் மகிமைதாஸ் ரூ.1 லட்சம் கேட்டார். அவரும் தன்னுடைய பெற்றோரிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி கொடுத்தார். ஆனால் அவர் வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபடாமல், அந்த பணத்தையும் குடித்து செலவு செய்து வந்ததாக தெரிகிறது.

இது பற்றி சம்பவத்தன்று சத்தியமேரி மகிமைதாசிடம் கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகிமைதாஸ் சத்தியமேரியை தாக்கினார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சத்தியமேரி சற்று நேரத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் அவரது தாய் ஆரோக்கியமேரி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த சத்தியமேரி உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் இது பற்றி ஆரோக்கியமேரி தன்னுடைய மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் சத்தியமேரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்தும் கடலூர் சப்-கலெக்டர் சரயூ மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story