மாவட்ட செய்திகள்

செய்யாறு அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் + "||" + Near Cheyyaru Open the Tasmac Store Responding Road stroke

செய்யாறு அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

செய்யாறு அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
செய்யாறு அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் மதுபாட்டில்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாறு,

செய்யாறு தாலுகா விநாயகபுரம் கிராமத்தில் இருந்து பெரும்பாலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் ராதிகா என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த மாதம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் விநாயகபுரம் கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.


இந்த நிலையில் நேற்று மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க பணிகள் நடந்தது. விற்பனையாளர் 2 பெட்டிகளில் மதுப்பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து இறக்கினர். இதனை பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு சென்று, விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது பொதுமக்களில் சிலர் திடீரென மதுபாட்டில் பெட்டியை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் செய்யாறில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள், செய்யாறு சரக துணை சூப்பிரண்டு (பொறுப்பு) பொற்செழியன், கலால் தாசில்தார் பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.