ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்கும் தகுதி உள்ளது: ‘நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம்’ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி


ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்கும் தகுதி உள்ளது: ‘நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம்’ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
x
தினத்தந்தி 14 Oct 2018 3:30 AM IST (Updated: 13 Oct 2018 11:54 PM IST)
t-max-icont-min-icon

‘ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்கும் தகுதி நடிகர் விஜய்க்கு உள்ளது. அவர் அரசியலுக்கு வரலாம்’ என்று அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

விக்கிரமசிங்கபுரம், 

‘ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்கும் தகுதி நடிகர் விஜய்க்கு உள்ளது. அவர் அரசியலுக்கு வரலாம்’ என்று அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

புனித நீராடினார்

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, சினிமா டைரக்டரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று பாபநாசம் வந்தார். அங்கு அவர் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். பின்னர் பாபநாசம் பாபநாச சாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மனிதநேயம்

புஷ்கரம் என்பது அறிவியலின் அடிப்படையில் நடக்கும் ஆன்மிகம். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகா புஷ்கரம் சிறப்பு வாய்ந்தது ஆகும். இதனால் நான் பாபநாசத்துக்கு வர ஆசைப்பட்டேன். மதங்களைவிட சிறந்தது மனிதநேயம். மனிதம் தான் நிலையானது. குருடனுக்கும் நம்பிக்கை கொடுப்பது ஆன்மிகம். இந்து தர்மத்தில் நல்லவனாக வாழ பல வழிகள் உள்ளன. அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான் மனிதநேயம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை உள்ளது. மகன், மகள், தாய், தந்தை என்று ஒவ்வொருவருக்கும் கடமை இருப்பது போல் நாட்டை ஆளும் தலைமைக்கும் கடமை உள்ளது. அவரவர் கடமையை செய்தால் அவர்களுக்கு நல்லது. பிறப்பால் நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்தியாவில் பிறந்ததால் முதலில் நான் இந்தியன். இந்தியன் என்றால் இந்து. மதம் என்பது இரண்டாவதுதான். நான் 69 படங்கள் இயக்கி உள்ளேன். உழைத்தேன். கடவுள் எனக்கு எல்லாம் கொடுத்தார். தமிழ் மக்களுக்கு ஏதாவது நான் செய்ய வேண்டும். நமக்கு சந்தோஷத்தை கொடுக்கக்கூடியவன் இறைவன். கடவுளை நாம் எந்த விதத்தில் பார்க்கிறோமோ அந்த விதத்தில் அவர் நமக்கு அருள் பாலிப்பார். ஆன்மாவை சுத்தப்படுத்துவதே ஆன்மிகம்.

அரசியலுக்கு வரலாம்

நடிகர் விஜயை நான் மகனாக பார்க்கவில்லை. தமிழக மக்களால் தான் அவர் இந்த அளவுக்கு உயர்ந்து உள்ளார். எல்லா மொழி பேசும் மக்களும் அவருடைய உயர்வில் பங்கு கொண்டு உள்ளனர். அவர் அரசியல் பற்றி பேசினால் சிலருக்கு ஏன் எரிகிறது? அவர் அரசியலுக்கு வருவதும், வேண்டாம் என்று நினைப்பதும் அவருடைய முடிவு. பிறப்பால் யாரும் டாக்டரோ, என்ஜினீயரோ, அரசியல்வாதியோ கிடையாது. அதுபோல்தான் அவரும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வரலாம். ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும். அதை கொடுக்கக்கூடிய தகுதி நடிகர் விஜய்க்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, ‘புலி‘ பட தயாரிப்பாளர் செல்வகுமார் உடன் இருந்தார்.

Next Story