அரசு மருத்துவமனைகளில், தேவையான மருந்துகள் அனைத்தும் உள்ளன - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்


அரசு மருத்துவமனைகளில், தேவையான மருந்துகள் அனைத்தும் உள்ளன - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:15 AM IST (Updated: 14 Oct 2018 12:04 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று சிவகங்கை வந்தார். அவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான வார்டுகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள பேரிடர் மேலாண்மை பிரிவு, முதியோர்களுக்கான தனிப்பிரிவு, குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, டெங்கு நோய் தடுப்பு வார்டு, சிடி ஸ்கேன் பிரிவு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கு போதுமான வசதிகள் உள்ளதா என்றும் அவைகள் சரியாக செயல்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து ரூ.4½ கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து சிகிச்சை பிரிவு பகுதியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவத் துறை இணை இயக்குனர் விஜயன்மதமடக்கி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் சு£தாரத்துறை செயலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:– பருவமழை தொடங்க உள்ளதால் மழை காலத்தில் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா, பன்றிகாய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்காய்ச்சல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் இந்த நோய்களின் தாக்கம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டத்தில சிங்கம்புணரி, அழகமாநகரி மற்றும் காரைக்குடி ஆகிய பகுதிகளில் கலெக்டர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோர் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது ரூ.87 லட்சம் மதிப்பில் முதியோர்களுக்கான புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விபத்து சிகிச்சை பிரிவு இன்னும் 2 மாதத்தில் செயல்படும். மேலும் நிலவேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story