அரசு கல்லூரி மாணவர்கள் தொழில் தொடங்க சிறப்பு பயிற்சி - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


அரசு கல்லூரி மாணவர்கள் தொழில் தொடங்க சிறப்பு பயிற்சி - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2018 3:45 AM IST (Updated: 14 Oct 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

அரசு கல்லூரி மாணவர்களுக்கு தொழில் தொடங்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஹேமலதா வரவேற்றார். நிகழ்ச்சியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கான தொழில் தொடங்கும் பயிற்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:– தொழில் ஆர்வம் உள்ள மாணவ–மாணவிகளை ஊக்கப்படுத்தி அவர்களை தொழில் முனைவோராக்கவும், பொதுத்துறையில் உள்ள நிறுவனங்களுக்கு உதவி செய்யவும், தொழில் மேம்பாடு அடையவும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் தொழில் முனைவோர் மேம்பாடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனைத்து அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் படித்து முடிக்கும் மாணவ– மாணவிகள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஆர்வம் உள்ள 100 மாணவ–மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.

கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாணவ–மாணவிகளை தொழில் முனைவோராக செம்மைப்படுத்துவதே இந்த முகாமின் முக்கிய நோக்கம். இன்றையக் காலக்கட்டத்தில் நாம் கற்ற கல்விக்கு தகுந்த தொழில் தொடங்கும் போது ஒவ்வொருவரும் முதலாளி தான். மாணவர்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. இதை மனதில் நிலைநிறுத்தி ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் டேனியல் பிரேம்நாத், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சுப்பராமன் நன்றி கூறினார்.


Next Story