ஆலங்குளம் அருகே பயங்கரம்: பச்சிளம் ஆண் குழந்தை குளத்தில் வீசி கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை கைது
ஆலங்குளம் அருகே, பச்சிளம் ஆண் குழந்தையை குளத்தில் வீசி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே, பச்சிளம் ஆண் குழந்தையை குளத்தில் வீசி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஆண் குழந்தை
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் இசக்கிமுத்து (வயது 27). கூலி தொழிலாளியான இவருக்கும், சீதபற்பநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் என்ற ஆனந்திக்கும் (21) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆனந்திக்கு கடந்த 22 நாட்களுக்கு முன்பு நடுக்கல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு, கடந்த வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் ஆனந்தி சீதபற்பநல்லூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து குழந்தையை பார்க்க சென்ற இசக்கிமுத்து, குழந்தையுடன் ஆனந்தியை அய்யனார்குளம் வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இசக்கிமுத்து குடிபோதையில் இருந்ததால், மாமியார் முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே இசக்கிமுத்து அங்கிருந்து சென்றுவிட்டார்.
போலீசில் புகார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இசக்கிமுத்து சீதபற்பநல்லூரில் உள்ள மனைவி வீட்டுக்கு குடிபோதையில் வந்து தங்கினார். நேற்று அதிகாலையில் கண்விழித்த ஆனந்தி, தொட்டிலில் இருந்த குழந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் படுத்திருந்த இசக்கிமுத்துவையும் காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுபற்றி சீதபற்பநல்லூர் போலீசில் இசக்கிமுத்து மீது சந்தேகத்தின் பேரில் ஆனந்தி வீட்டார் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், அய்யனார்குளத்தில் இருந்த இசக்கிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், இசக்கிமுத்துவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
குளத்தில் வீசி கொலை
விசாரணையில், குழந்தையை இசக்கிமுத்து இரவில் தூக்கிச் சென்று சீதபற்பநல்லூரில் உள்ள குளத்தில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. இதனை அறிந்த ஆனந்தி வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றிய தகவல் ஊர் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் குளத்துக்கு விரைந்தனர். இசக்கிமுத்துவையும் போலீசார் அங்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை வீசிய இடத்தை அடையாளம் காட்டும்படி அவரிடம் கூறினர்.
அதன்படி இசக்கிமுத்து அடையாளம் காட்டவே, ஊர் மக்கள் குளத்துக்குள் வேகமாக இறங்கி தண்ணீரில் மூழ்கி குழந்தையை தேடினர். அங்கு தண்ணீருக்குள் கிடந்த குழந்தையின் உடலை ஒருவர் மீட்டு வெளியே கொண்டு வந்தார். குழந்தையை பார்த்ததும் ஆனந்தியின் குடும்பத்தார் ஓடி வந்து, கதறி அழுதனர். அப்போது சுற்றியிருந்த ஊர் மக்களும் கண்ணீர் ததும்ப நின்றனர். பின்னர் குழந்தையின் உடலை போலீசார் கைப்பற்றி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை கைது
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தனர். விசாரணையில் அவர், மனைவி மற்றும் குழந்தையை வீட்டுக்கு அழைத்தபோது மாமியார் அனுப்ப மறுத்து அவமானப்படுத்தியதாகவும், இதனால் நான் ஆத்திரத்தில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கிய பிறகு குழந்தையை தூக்கிச் சென்று குளத்தில் வீசி கொலை செய்ததாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
பச்சிளம் ஆண் குழந்தையை, பெற்ற தந்தையே குளத்தில் வீசிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
ஏற்கனவே கடந்த வருடம் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் பிறந்து 22 நாட்கள் ஆன நிலையில், அய்யனார்குளம் வீட்டில் தொட்டிலில் தூங்கியபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தற்போது அந்த குழந்தையின் மர்ம சாவு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story