பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்கும் - தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்கும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்தார்.
பரமக்குடி,
பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் செந்தாமரை கண்ணன், செல்லத்துரை அப்துல்லா, வேலுச்சாமி, பாரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் தலைவர் அப்துல் அஜீஸ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத், பொது செயலாளர் அருள் பெத்தையா ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
முன்னதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் நிருபர்களிடம் கூறியதாவது:– மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தமிழகத்திற்கு போதிய நிதிகளை வழங்காமல் வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை வேறு மாநிலங்களுக்கு வழங்குகிறது. பிரதமர் மோடி தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் ரிமோட் கண்ட்ரோல் போல் இயக்குகிறார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். பா.ஜனதா, அ.தி.மு.க. அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் தினமும் ஊழல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
இதை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த 2 கட்சிகளும் படுதோல்வி அடையும், டெபாசிட் இழக்கும். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மாற்றம் இல்லை. எவ்வித கோஷ்டி பூசலும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் கட்சி பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.