தேவிபட்டினத்தில் 5 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


தேவிபட்டினத்தில் 5 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:00 PM GMT (Updated: 13 Oct 2018 6:52 PM GMT)

தேவிபட்டினத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 5 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பனைக்குளம்,

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடைவிதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவின்பேரில் அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்வதுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை தேவிபட்டினம் பகுதியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை தலைமையில் தேவிபட்டினம் ஊராட்சி செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது பஸ் நிலைய பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் பிளாஸ்டிக் பைகள் அதிகஅளவில் வைத்திருந்தது தெரிந்தது.

கடந்த நாட்களில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது 3 முறை நடவடிக்கை எடுக்காமல் எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை வைத்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 5 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ததுடன் கடை உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்படும் என்றும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


Next Story