மார்த்தாண்டம் அருகே ஆட்டோ மீது வேன் மோதல்; மனைவி உள்பட 2 பேர் சாவு கண்டக்டர் படுகாயம்


மார்த்தாண்டம் அருகே ஆட்டோ மீது வேன் மோதல்; மனைவி உள்பட 2 பேர் சாவு கண்டக்டர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:45 PM GMT (Updated: 13 Oct 2018 6:56 PM GMT)

மார்த்தாண்டம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் மனைவி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். கண்டக்டர் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக புறப்பட்ட போது இந்த விபத்து நடந்துள்ளது.

குழித்துறை,

குமரி மாவட்டம் முளகுமூடு அருகே வெள்ளிகோடு, பிரம்புவிளையை சேர்ந்தவர் ஜான் அந்தோணி. மார்த்தாண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுபலீலா (வயது 50). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். சுபலீலா கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஜான் அந்தோணி முடிவு செய்தார்.

நேற்று அதிகாலையில் ஜான் அந்தோணி, வேலைக்கு புறப்படும்போது, மனைவியிடம் ஆட்டோவில் மார்த்தாண்டம் போக்குவரத்து கழக பணிமனைக்கு வருமாறும், அங்கிருந்து இருவரும் சேர்ந்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு செல்வோம் என்று கூறினார்.

இதையடுத்து சுபலீலா நேற்று காலை 10 மணி அளவில் வெள்ளிகோட்டில் இருந்து ஒரு ஆட்டோவில் மார்த்தாண்டத்துக்கு புறப்பட்டார். ஆட்டோவை கூட்டமாவு பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (52) ஓட்டிச் சென்றார்.

இவர்கள் மார்த்தாண்டத்துக்கு சென்று ஜான் அந்தோணியை அழைத்து கொண்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக புறப்பட்டனர். மார்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் சென்ற போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வேன் ஒன்று வேகமாக வந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் வேனும், ஆட்டோவும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த கணவன்- மனைவி மற்றும் டிரைவர் ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கினர். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் ஆட்டோவுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆட்டோ டிரைவர் ஸ்டீபன் ராஜ், சுபலீலா ஆகிய இருவரும் ஆட்டோவுக்குள்ளேயே உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். கண்டக்டர் ஜான் அந்தோணி படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அவரை பொதுமக்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இறந்தவர்களது உடல்களை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் நாகர்கோவில் அனந்தநாடர் குடியிருப்பை சேர்ந்த மனோகர் (40) என்பவரை கைது செய்தனர்.

விபத்தில் இறந்த ஆட்டோ டிரைவர் ஸ்டீபன் ராஜுக்கு டெல்பின் சுதா (42) என்ற மனைவியும், ஏஞ்சல் பிபினா, ஆல்பின் மேரி செல்பியா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். ஸ்டீபன் ராஜ் வெள்ளிகோடு பகுதியில் மருந்து கடையும் நடத்தி வந்தார். அத்துடன் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

வேன்- ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story