பஞ்சாப்பில் தக்கலை ராணுவ வீரர் சாவு: சகவீரர் சுட்டுக் கொன்றாரா? விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தகவல்


பஞ்சாப்பில் தக்கலை ராணுவ வீரர் சாவு: சகவீரர் சுட்டுக் கொன்றாரா? விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:45 AM IST (Updated: 14 Oct 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப்பில் இறந்த தக்கலை ராணுவ வீரரை சகவீரர் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பருத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் ஜெகன் (வயது 38). இவர், பஞ்சாப்பில் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப்- காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே ராணுவ வீரர் ஜெகன் சகவீரரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக இறுதிசடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ராணுவ அதிகாரிகளிடம், ஜெகனின் உறவினர்கள் கூறியதாவது:-

ஜெகனின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் ஜெகனின் இறுதி சடங்கின் போது ராணுவ மரியாதை செலுத்தப்பட்டதே தவிர, துப்பாக்கி குண்டுகள் எதுவும் முழங்கப்படவில்லை. எனவே அவர், தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில்தான் சுட்டு கொல்லப்பட்டாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. மேலும் ராணுவ முகாமில் இருந்த போது, சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜெகனின் குடும்பத்துக்கு ராணுவ வீரர் இறந்தால் கிடைக்கக்கூடிய பண பலன்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே அவரது மரணம் குறித்து எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஜெகனின் சாவு குறித்து உண்மை நிலவரத்தை தெரிவியுங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து ஜெகனின் உறவினர்களிடம் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ஜெகன் மார்பில் குண்டு பாய்ந்துதான் இறந்துள்ளார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க 15 நாட்கள் ஆகும். இருந்தாலும் ஜெகனின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்களில் அவரது சாவு குறித்த உண்மை நிலவரத்தை தெரிவிப்போம் என்றனர்.

ராணுவ அதிகாரிகளின் இந்த தகவலால் ஜெகனின் உறவினர்கள் மற்றும் பருத்திக்காட்டுவிளை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story