அ.தி.மு.க.வை ஒரு பெண் வழிநடத்தும் காலம் வரும் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு


அ.தி.மு.க.வை ஒரு பெண் வழிநடத்தும் காலம் வரும் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2018 5:00 AM IST (Updated: 14 Oct 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வை ஒரு பெண் வழிநடத்தும் காலம் வரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மாநகராட்சி சார்பாக 204 உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள், 52 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய 3 சக்கர வாகனங்கள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி மடீட்சியா அரங்கத்தில் நேற்று நடந்தது. கோபாலகிருஷ்ணன் எம்.பி.,கலெக்டர் நடராஜன், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ் சேகர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி வாகனங்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ஜெயலலிதா கடந்த 2016–ம் ஆண்டு பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி இதுவரை 1 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் 3 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனங்களுக்கான மானியம் வழங்கப்பட உள்ளது. பெண்கள் சாதித்து காட்ட வேண்டும், ஆணுக்கு நிகராக பெண்கள் வர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜெயலலிதா பேரவை சார்பில் வருகிற 24–ந் தேதி பெண்கள் சைக்கிள் பேரணி நடக்க உள்ளது. அதில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பயிற்சி முகாம் வேலம்மாள் மருத்துவ கல்லூரி அருகில் உள்ள அரங்கத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:–

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க.தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. இதில் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்று போட்டி போட்டு கொண்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். எனவே இனி வரும் காலத்தில் யாராவது ஒரு பெண் அ.தி.மு.க.வை வழி நடத்தும் கால கட்டம் வரும். ஆண்களுக்கு நிகராக இந்த இயக்கத்தை வழி நடத்தக்கூடியவர்கள் பெண்கள் தான். இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, தொண்டனாக இருந்து இன்று முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அவரை போன்று நீங்கள் கட்சியில் பெரிய அளவிற்கு வரமுடியும். இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும் போது, இந்த இயக்கத்திற்கு பெண்கள் தலைமை ஏற்கும் நிலை வரும்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறும் போது, ‘‘முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வேண்டுமென்றே தி.மு.க. ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. அதன் அடிப்படையில் ஐகோர்ட்டும் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை. குற்றச்சாட்டுக்கு எல்லாம் பதவி விலக வேண்டுமென்றால் இந்தியாவில் எந்த முதல்–அமைச்சரும் பதவியில் இருக்க முடியாது. இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. தான். அவர்கள், அ.தி.மு.க. ஊழல் குற்றச்சாட்டு சொல்வதை கேட்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்‘‘ என்றார்.

இரு சக்கரவாகனம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஒரு கோரிக்கை விடுத்து பேசினார். அவர், ‘‘மதுரை நகரின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நகரில் உள்ள கண்மாய்களில் நிரந்தர நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வடக்குத்தொகுதிக்குட்பட்ட செல்லூர், வண்டியூர் கண்மாய்களில் நிரந்தரமாக நீர் தேக்க வேண்டும். ஏற்கனவே பொதுமக்களின் ஒத்துழைப்போடு இந்த 2 கண்மாய்களிலும் தூர்வாரப்பட்டு தற்போது நீர் தேக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்த கண்மாய்களை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலை நீடித்து இருக்க வேண்டும். எனவே மீன் பிடி குத்தகை வழங்க கூடாது. குத்தகை எடுப்பவர்கள் மீனுக்காக, நீர் திறந்து விட்டு விடுகிறார்கள். நீர் வீணாகி விடுகிறது‘‘ என்றார்.


Next Story