சரக்கு ரெயில் பெட்டிகளை பிரிக்கும் பணியால் நீடாமங்கலத்தில், 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு


சரக்கு ரெயில் பெட்டிகளை பிரிக்கும் பணியால் நீடாமங்கலத்தில், 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2018 4:15 AM IST (Updated: 14 Oct 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு ரெயில் பெட்டிகளை பிரிக்கும் பணியால் நீடாமங்கலத்தில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம்,

நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது நீடாமங்கலம். இங்கு உள்ள ரெயில்வே கேட், நெடுஞ் சாலையின் குறுக்காக உள்ளதால், நீடாமங்கலத்தில் நாள்தோறும் பல மணிநேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

நீடாமங்கலத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சரக்கு ரெயில்கள் மூலம் நெல் மற்றும் அரிசி அனுப்பும் பணிகள் அடிக்கடி நடக்கிறது. அப்போது நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்படுவதால் திருவாரூர், நாகை, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தஞ்சையில் இருந்து காலி பெட்டிகளுடன் சரக்கு ரெயில் ஒன்று நீடாமங்கலம் வந்தது. அப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டது. அந்த சரக்கு ரெயிலில் இருந்து காலி பெட்டிகள் பிரிக்கப்பட்டு, திருவாரூருக்கு அனுப்பும் பணி நடந்தது. இதன் காரணமாக ரெயில்வே கேட் 5.30 மணியில் இருந்து 7 மணிவரை மூடப்பட்டது.

இதனால் பட்டுக்கோட்டை, மன்னார்குடி பகுதியில் இருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், சென்னை, பெங்களூரு, நெல்லை, நாகர்கோவில், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்களும், நீடாமங்கலத்தில் இருந்து திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் செல்லும் வாகனங்களும் ரெயில்வே கேட்டின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து அனுப்பும் பணி முடிந்து 1½ மணி நேரத்துக்கு பின்னரே ரெயில்வே கேட் திறக்கப்பட்டதால் நீடா மங்கலத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. சாலை போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் வேறு ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டிகளை பிரிக்கும் பணியை மேற்கொள்ளாமல் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் அந்த பணிகளை மேற்கொண்டது பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயணிகளை அவதிக்குள்ளாக்கியது. நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க தஞ்சை-நாகப்பட்டினம் இருவழிச்சாலை திட்ட பணியையும், நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story