வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து கொடுக்க வேண்டும் - நகராட்சி கமி‌ஷனர் உத்தரவு


வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து கொடுக்க வேண்டும் - நகராட்சி கமி‌ஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 14 Oct 2018 3:45 AM IST (Updated: 14 Oct 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என்று நகராட்சி கமி‌ஷனர் கண்ணன் உத்தரவிட்டு உள்ளார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை திறந்தவெளியில் அல்லது சாக்கடை கால்வாயில் கொட்டி விடுகின்றனர். இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று வியாபாரிகள், கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கமி‌ஷனர் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், ரவிச்சந்திரன், சீனிவாசன், விஜய் ஆனந்த், ஞான சேகர் மற்றும் வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். இதுகுறிது நகராட்சி கமி‌ஷனர் கண்ணன் கூறியதாவது:–

கடைகள், வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை திறந்தவெளியில், சாக்கடை கால்வாயில் கொட்ட கூடாது. மக்கும், மக்காத குப்பை என பிரித்து 2 குப்பை தொட்டிகளில் போட வேண்டும். குப்பைகள் சேர்வதை பொறுத்து பெரிய அளவிலான தொட்டிகளை வைத்து கொள்ள வேண்டும். அதை மறுநாள் வரும் துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் குப்பைகளை மூட்டை கட்டி கடைகள் முன்போடக்கூடாது.

ஏற்கனவே திறந்வெளியில் குப்பைகளை கொட்டிய 50 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று வீடுகளிலும் பொதுமக்கள் குப்பைகளை பிரித்து கொடுக்க வேண்டும். குப்பை இல்லாத நகரமாக மாற்ற நகராட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சாக்கடை கால்வாயில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு, அந்தந்த வார்டு பகுதிகளில் உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அந்த உரங்களை பயன்படுத்தி காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றது. மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தேவைப்படுவோர் நகராட்சி அலுவலகத்தை அணுகி வாங்கிக்கொள்ளலாம்.

பிளாஸ்டிக் பொருட்களால் புற்றுநோய் உருவாகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story