2 பேரை மண்வெட்டியால் தாக்கிய தந்தை, மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


2 பேரை மண்வெட்டியால் தாக்கிய தந்தை, மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 13 Oct 2018 10:00 PM GMT (Updated: 13 Oct 2018 7:27 PM GMT)

2 பேரை மண்வெட்டியால் தாக்கிய தந்தை, மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சப்–கோர்ட்டு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூரை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 70). இவரது உறவினர் தண்டியப்பன் (40). இருவரும் விவசாயிகள் ஆவார். மயில்சாமியின் பக்கத்துக்கு தோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் (59). இந்த நிலையில் கடந்த 2013–ம் ஆண்டு நவம்பர் மாதம் 3–ந்தேதி பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீரை தோட்டத்திற்கு பாய்ச்சுவது தொடர்பாக மயில்சாமிக்கும், சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது தோட்டத்தில் மயில்சாமி, தண்டியப்பனும், எதிர்தரப்பில் சக்திவேல், அவரது மகன் செந்தில்குமாரும் இருந்தனர். தகராறு முற்றவே சக்திவேலும், செந்தில்குமாரும் சேர்ந்து மண்வெட்டியால் மயில்சாமி, தண்டியப்பனை தாக்கியதாக தெரிகிறது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மயில்சாமிக்கு அப்போது பேச முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் தண்டியப்பன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலையும், செந்தில்குமாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கு பொள்ளாச்சி சப்–கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல், செந்தில்குமார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரையும் நெகமம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சம்பத்குமார் ஆஜராகி வாதாடினார்.


Next Story