ஜி.எஸ்.டி. வரி விதிப்பு எதிரொலி: நெகமம் காட்டன் சேலை விற்பனை மந்தம்


ஜி.எஸ்.டி. வரி விதிப்பு எதிரொலி: நெகமம் காட்டன் சேலை விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 14 Oct 2018 3:30 AM IST (Updated: 14 Oct 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஜ.எஸ்.டி. வரிவிதிப்பு காரணமாக நெகமம் காட்டன் சேலைகள் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளது.

நெகமம்,

ஆறுகெஜம், எட்டு கெஜம் நூல் சேலை என்றாலே தமிழகத்தில் நெகமம், சின்னாளப்பட்டி ஊர்கள் தான் நினைவுக்கு வரும். மற்ற ஊர்களில் நூல் சேலை நெசவு நின்று விட்டாலும் நெகமத்தில் இன்னும் 300– க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் இந்த தொழிலை செய்து வருகின்றனர். நெகமம் நூல் சேலை உற்பத்தி 200 வயதை தாண்டி விட்டது. இந்த நிலையில் பழமையில் புதுமை காணும் வகையில் பாரம்பரியமிக்க உற்பத்தியாளர்கள் கைத்தறி நெசவை காப்பாற்றும் வகையிலும், தங்களையே நம்பி உள்ள நெசவுத் தொழிலாளர் குடும்பங்களை காப்பாற்றும் நோக்கில் சேலைகளை இன்றைய காலத்திற்கேற்ப வடிவமைக்கின்றனர். நெகமம், வீதம்பட்டி, சின்னநெகமம், வக்கம்பாளையம், குள்ளக்காபாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், காணியாலாம்பாளையம், வதம்பச்சேரி, தாசநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி, குரும்பபாளையம், உள்ளிட்ட 20 கிராமங்களில் கைத்தறி சேலை நெசவுத்தொழில் உள்ளது. இதில் மற்ற இடங்களை விட நெகமத்தில் சேலை நெசவு தொழிலில் பலர் நீடித்து உள்ளனர். இது குறித்து நெகமத்தில் டெக்ஸ்டைல்ஸ் பங்குதாரர் லட்சுமி குமார் கூறியதாவது:–

இளம் பெண்கள், கல்லூரி, மாணவிகள், ஆசிரியைகள், பணக்கார வீட்டு பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் இப்போதும் விரும்புவது கோவை காட்டன் சேலைகளைத்தான். நெகமம் பகுதியில் தயாரிக்கப்படும் இந்த காட்டன் நூல் சேலைகள் தான் சவுத்காட்டன் என்றும், கோவை காட்டன் சேலை ரகங்கள் என்றும் உலகமெங்கும் விற்பனையாகி வருகிறது. இந்த ரகங்கள் ரூ. 1000 முதல் ரூ.2500 வரை விற்பனையாகிறது. இங்கு தயாரிக்கப்படும் சேலை ரகங்கள் சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு, ஐதராபாத், கோழிக்கோடு, மைசூர், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட நகரங்கள் மட்டுமின்றி கனடா, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காட்டன் சேலைகளில் எம்ப்ராய்டரிங் மற்றும் போச்சம்பள்ளி ரகங்களுக்கு இன்றைய இளம் பெண்களிடம் கூடுதல் மவுசு உள்ளது. குறிப்பாக பார்டர் பெரிதாக உள்ள ரகங்களை அதிகம் விரும்புகின்றனர். சுடிதார் ரகங்கள் ரூ.1200 முதல் விற்பனை ஆகிறது.

ஒரு சேலை தயாரிக்க ஒரு குடும்பத்திற்கு 1½ நாட்கள்வரை ஆகும். தொடர் மின் வெட்டு வரும் நாட்களில் ஒரு சேலை தயாரிக்க 4 அல்லது 5 நாட்கள் வரை ஆகும். மேலும் கடந்த ஆண்டு சேலை உற்பத்தி அதிகளவில் இருந்தது. இந்த ஆண்டு உற்பத்தி இருந்தும் விலை உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு ஒரு சேலை ரூ. 1000–க்கு விற்பனை ஆனது. தற்போது 5 சதவீத ஜி.எஸ்.டி.வரிவிதிப்பால் ஒரு சேலை ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. ஜி.எஸ்.டி.வரிவிதிப்பால் சேலை உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் விற்பனையும் குறைந்து விட்டது. ஜி.எஸ்.டி.வரிவிதிப்பை நீக்கினால் தான் மீண்டும் சேலை உற்பத்தி அதிகரிக்கும். விற்பனையும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பாதிக்குப்பாதியாக சேலை உற்பத்தி குறைந்து விட்டதால் தீபாவளி பண்டிகைக்கு நெகமம் காட்டன் சேலைகள் விற்பனை குறைந்து மந்தமாக உள்ளது. எனவே காட்டன் சேலைக்கு ஜி.எஸ்.டி.வரி விதிப்பை நீக்க வேண்டும். இல்லையெனில் நெசவு தொழிலை நம்பி குடும்பம் நடத்தும் தொழிலாளர்கள் நிலை பரிதாபமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story