தமிழகத்தில் ஊழல்வாதிகளை ஒதுக்க வேண்டிய காலம் விரைவில் வரும் சேலத்தில் கமல்ஹாசன் பேச்சு


தமிழகத்தில் ஊழல்வாதிகளை ஒதுக்க வேண்டிய காலம் விரைவில் வரும் சேலத்தில் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 7:32 PM GMT)

‘தமிழகத்தில் ஊழல்வாதிகளை ஒதுக்க வேண்டிய காலம் விரைவில் வரும்’ என்று சேலத்தில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

சேலம்,

சேலம் கோட்டை மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று ஏங்கி கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில் நானும் ஒருவன். இது மாபெரும் பொதுக்கூட்டம் என்று சொன்னால் மிகை ஆகாது. உங்கள் அன்பினால் நான் இங்கு வந்து உள்ளேன். இந்த அன்பு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை விட பெரிய வேலை இருக்கிறது. தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவது தனி மனிதன் வேலை இல்லை.

அரை நூற்றாண்டுக்கு முன்பே இந்த முடிவை எடுத்து இருக்க வேண்டும். போனது போகட்டும். நாளைய தமிழகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அது தனி மனிதனால் முடியாது. உங்களது அன்பும், எதிர்பார்ப்பும் இருந்தால் அது நிச்சயம் நடக்கும். நடத்தி காட்டுவோம்.

நான் சிறிய வயதில் இருந்தபோது மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் தோளில் இருந்து வளர்ந்தவன். அது எனக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். அதன்பிறகு தனிமைப்படுத்தப்பட்ட நான், இப்போது உங்களது தோளில் நிற்கிறேன். ஆளுங்கட்சியின் ஊழலை பற்றி பேசுவதற்கு நான் இங்கு வரவில்லை. அதுபற்றி பேசி நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

தமிழகத்தில் ஊழல்வாதிகளை ஒதுக்க வேண்டிய காலம் விரைவில் வரும். அப்போது உங்களது குரல் பலமாக ஒலிக்க வேண்டும். காசு கொடுத்தால் எதையும் விலைக்கு வாங்கி விடலாம் என்று சில அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். அதை மாற்ற வேண்டும். வறுமையின் காரணத்தினால் சிலர் ஓட்டுக்கு பணம் வாங்குகிறார்கள். அதை நான் குறை சொல்லமாட்டேன். அரசியல்வாதிகள் சம்பாதித்த பெரும் தொகையின் ஒரு பகுதியை என்று கூற முடியாது. வெறும் சில்லறையை கொடுக்கிறார்கள். வறுமையை காட்டி உங்களை வென்றவர்களை, இந்த முறை நீங்கள் வென்று ஜெயித்து காட்டனும்.

ஓட்டுக்கு பணம் கொடுத்து பலர் வெற்றி பெற்று உள்ளார்கள். நீங்கள் தோற்று போய் உள்ளர்கள். இம்முறை நீங்கள் வெல்ல வேண்டும். வறுமை என்பது ஒரு துயர சம்பவம். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த வறுமை தேவையில்லை. பலமுறை வெவ்வேறு தலைவர்களை ஜெயிக்க வைத்துவிட்டு மக்களாகிய நீங்கள் தோற்று கொண்டு இருக்கிறீர்கள்.

பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்.போன்ற மக்கள் மனதில் இடம்பெற்ற தலைவர்கள் இப்போது இல்லை. நான் மக்களுடனான பயணம் மூலம் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறேன். அவ்வாறு நான் செல்லும்போது, மக்களின் எதிர்பார்ப்பும், அன்பும் அதிகமாக இருப்பதை உணரமுடிகிறது. உங்களது நம்பிக்கையை வீண்போக விடமாட்டேன்.

சினிமாவில் நடித்துக்கொண்டு இருப்பதால் என்னை பகுதிநேர அரசியல்வாதியா? முழுநேர அரசியல்வாதியா? என்று கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர்.எத்தனை முறை எம்.எல்.ஏ.வாக இருந்தபோதிலும் அவர் தனக்கென்று வாழ்வாதாரத்திற்காக சினிமாவில் நடித்திருந்தார். அவர் முழுநேர அரசியல்வாதி இல்லையா?. நான் முழுநேர அரசியல்வாதி தான். அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் அன்பு, தைரியம், நேர்மை அவர்களுக்கு பின்னால் அது எங்கே போனது. அதனால் தான் அவர்கள் இன்னும் மக்கள் மனதில் நிற்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விட்டது என்று கதறி அழுதது போதும். அடுத்து கேள்வி கேட்க வேண்டும். அதற்கு கிராம சபை என்ற அற்புத ஆயுதம் உள்ளது. கிராம சபைகளை வலுப்படுத்துங்கள். சட்டசபைக்கு உள்ள பலத்தை விட அதிக பலம் கிராம சபையில் இருக்கிறது. 25 ஆண்டுகளாக கிராம சபை கூட்டம் என்ற பெயரில் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அது மாற்றப்பட வேண்டும். கிராமங்களில் உள்ள நீர்வளத்தை மாசுப்படுத்தாமல் அது பாதுகாக்கப்பட வேண்டும். இன்றைக்கு மழைக்கு பஞ்சமில்லை. நல்லவர்கள் இருப்பதால், இங்கு மழை பெய்கிறது. ஆனால் அந்த மழைநீரை சேமிக்காமல் இருப்பது தான் வேதனைக்குரியது. நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு மக்கள் நீதி மய்யம் உறுதுணையாக இருக்கும்.

எல்லோரையும் விலை பேச முடியாது. என்னையும் சிலர் விலை பேசி தோற்று இருக்கிறார்கள். சிலர் மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை. நான் விலை போக மாட்டேன். மக்களின் சந்திப்பு, இந்த உரையாடல் தொடரும். அதற்கான பாதையை நீங்கள் வகுத்துவிட்டீர்கள். நீங்கள் வழி அனுப்பும் வரை திரும்ப, திரும்ப வருவேன். நாளை நமதே என்று நாம் அனைவரும் ஒன்றுகூடி செயல்பட வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

கூட்டத்தில் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருந்தபோது, ஒருவர் எம்.ஜி.ஆரின் தோளில் கமல்ஹாசன் இருக்கும் படத்தை கையில் கொண்டு வந்திருந்தார். பின்னர் அந்த படத்தை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் காண்பித்து, நான் எம்.ஜி.ஆரின் தோளில் இருந்து வளர்ந்தவன், என்று பெருமையாக கூறினார்.

முன்னதாக சேலம் பள்ளப்பட்டியில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசும்போது, தமிழகத்தில் ஒரு மாற்றத்தை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டு வரவேண்டும். வெறும் புரட்சி என்று பேசிக்கொண்டு இருந்தால் போதாது. அதை நடத்தி காட்ட வேண்டிய தருணம் இதுவாகும். உங்கள் கை மேலோங்கி இருக்க வேண்டும். அது தாழ்ந்து இருக்க கூடாது, என்றார்.

Next Story