ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனங்களை ஓட்ட கூடாது போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனங்களை ஓட்ட கூடாது போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2018 4:00 AM IST (Updated: 14 Oct 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனங்களை ஓட்ட கூடாது என்று, போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அசோக சக்கர ஸ்தூபி திறப்பு விழா போலீஸ் நிலைய வருடாந்திர ஆய்வு, மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் வரவேற்று பேசினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அசோக சக்கரம் ஸ்தூபியை திறந்து வைத்து மாணவ- மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர் மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்கள் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். பள்ளி பருவம் மாணவர்களின் மனநிலையை மாற்றக்கூடிய பருவம். இந்த பருவத்தில் மனதை ஒருநிலை படுத்தி கல்வி என்ற மிகப்பெரிய சொத்தை சேர்க்க வேண்டும். கல்வியை நகரத்திலும், வெளிநாடுகளிலும் பயின்றால் மட்டும் தான் பணி கிடைக்கும் என்பது தவறு. இதற்கு என்னை(செந்தில்குமார்) உதாரணமாக கொள்ளலாம். நான் ஆவினங்குடி என்ற கிராமத்தில் ஒரு அரசு பள்ளியில் படித்தேன். தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையும், வருமான வரித்துறை இணை ஆணையராக உள்ள ரெங்கராஜனும் அரசு பள்ளியில் படித்துள்ளனர்.

எனவே கல்வி கற்க பள்ளி முக்கியமல்ல. எந்த பள்ளியில் படித்தாலும் நாம் அறிவாற்றலுடன் மனதை ஒரு நிலைப் படுத்தி படிப்பை மட்டும் முழுசிந்தனையாக கொண்டு படித்தால் நிச்சயமாக வாழ்க்கையில் நல்ல பணிக்கு செல்லலாம். தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கொலை வழக்கில் 61 பேர் இறந்துள்ளனர்.

மாணவர்கள் ஒட்டுனர் உரிமம் இன்றியும், தலைக்கவசம் அணியாமலும் வாகனங்களை ஒட்டக்கூடாது. சாலை விதிகளை கடைப்பிடித்து விபத்தில் இருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும். வீரியம் மிக்க விதைகள் விண்ணில் கூட முளைத்து விடும். மாணவர்களும் வீரியம் மிக்க விதைகளாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பதிவேடுகள் பராமரித்தல், நிலுவையில் உள்ள வழக்குகள், முடிக்கப்பட்ட வழக்குகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மணி மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் முருகானந்தம், தாளாளர் குணசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story