இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள காசிபாளையம் பணிமனையில் புதிதாக 5 பஸ்கள் இயக்க தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புதிய பஸ்கள் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக அண்ணா போக்குவரத்து கழக மண்டல செயலாளர் ஜீவா ராமசாமி தலைமையில் அமைச்சர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் வருகிற ஜனவரி மாதத்திற்கு பிறகு பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் மாவட்டம் வாரியாக பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் மூலம் வரக்கூடிய தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பள்ளிக்கூட மாணவ –மாணவிகளுக்கு கற்றுத்தரப்பட உள்ளது.
ஈரோடு மண்டலத்துக்கு மொத்தம் 112 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 56 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. மேலும் 56 பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சேவை நோக்குடன் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் வாகனங்களுக்கு ஏற்ப தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஊழல் குறித்து கருத்து ஏதும் கூற விரும்பவில்லை.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.