விழுப்புரத்தில் பரபரப்பு: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல்


விழுப்புரத்தில் பரபரப்பு: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:45 AM IST (Updated: 14 Oct 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து காவலாளி, துப்புரவு பணியாளர் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் அவசர சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இது தவிர பலர் உள்நோயாளிகளாகவும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த இளையபெருமாள் (வயது 39) என்பவர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது மருத்துவமனையில் காவலாளியாக பணியில் இருந்த விழுப்புரம் எனதிரிமங்கலத்தை சேர்ந்த ராஜா (32) என்பவர், இளையபெருமாளை தடுத்து எதற்காக செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது தனது மனைவியின் தங்கை பிரசவ வார்டில் உள்ளதாகவும், அவருக்கு துணையாக தன்னுடைய மனைவி இருப்பதாகவும் அவரை பார்க்க செல்ல வேண்டும் என்று இளையபெருமாள் கூறினார். அதற்கு ராஜா, நீங்கள் குடிபோதையில் இருக்கிறீர்கள், எனவே மருத்துவமனைக்குள் செல்ல வேண்டாம் என்று கூறி அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் ராஜாவிடம் இளையபெருமாள் தகராறு செய்தார். மேலும் தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (32), ராமச்சந்திரன் (28) ஆகியோரை வரவழைத்தார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ராஜாவை திட்டி தாக்கினர். இதனை தடுக்க வந்த மருத்துவமனையின் துப்புரவு பணியாளரான கள்ளக்குறிச்சி அகரத்தார் தெருவை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவரையும் அவர்கள் தாக்கினர்.

அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர், செவிலியர்கள் விரைந்து சென்று அவர்கள் 3 பேரிடமும் தட்டிக்கேட்டனர். அதற்கு அவர்களை தகாத வார்த்தையால் 3 பேரும் திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து டாக்டர்கள், விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் பணிக்கு வந்த டாக்டர்கள், ஏற்கனவே நேற்று முன்தினம் இரவுப்பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் பணியை புறக்கணித்து மருத்துவமனை வளாகம் முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை கண்டித்தும், இதுகுறித்து புகார் செய்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்த போராட்டம் காரணமாக மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பது, மருந்து, மாத்திரைகள் வழங்குவது, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்வது உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மருத்துவமனை ஊழியர்களை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் பணி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிட்டனர். இதனை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் காலை 9 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். இதனிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இளையபெருமாள், ஸ்ரீகாந்த், ராமச்சந்திரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையபெருமாளை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

இந்த திடீர் போராட்டத்தினால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story