பாலக்கோட்டில் பயங்கரம்: சிறுமி எரித்துக்கொலை போலீசார் விசாரணை


பாலக்கோட்டில் பயங்கரம்: சிறுமி எரித்துக்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Oct 2018 3:45 AM IST (Updated: 14 Oct 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோட்டில் சிறுமி எரித்துக்கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதி கோட்டை தெரு மசூதி பின்புறம் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அருகில் உள்ள ஆற்றோரம் முட்புதர்கள் முளைத்து காணப்படுகிறது. நேற்று காலை இந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் மற்றும் கைப்பந்து விளையாட சென்றனர். அப்போது பந்து ஆற்றோரம் உள்ள முட்புதரில் விழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறுவர்கள் பந்தை எடுக்க சென்றபோது அங்கு துர்நாற்றம் வீசியது. உடனே அவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அங்கு தீயில் எரிந்த நிலையில் பிணம் கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அந்த பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று பார்த்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

முட்புதருக்குள் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் பிணம் இருப்பதும், அவள் 2 நாட்களுக்கு முன்பு எரித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. முகம், உடல் முழுவதும் தீயில் எரிந்த நிலையில் இருந்ததால் அவள் யார்? எந்த ஊரை சேர்ந்தவள்? என்று அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியை யாரேனும் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து எரித்தார்களா? இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி எரித்து கொல்லப்பட்ட இந்த பயங்கர சம்பவம் பாலக்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story