அமராவதி ஆற்றில் தத்தளித்த 2 வாலிபர்கள் உயிருடன் மீட்பு


அமராவதி ஆற்றில் தத்தளித்த 2 வாலிபர்கள் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 13 Oct 2018 11:15 PM GMT (Updated: 13 Oct 2018 9:26 PM GMT)

தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கும் போது தத்தளித்த 2 வாலிபர்களை அருகில் வயலில் வேலை செய்தவர்கள் காப்பாற்றினார்கள்.

தாராபுரம்,

திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன் சுந்தரேசன் (வயது 24). இவருடைய நண்பர்கள் திருப்பூர் கொங்குநகரை சேர்ந்த ரவிவர்மன் (20), கரட்டாங்காட்டு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (23), அதே பகுதியை சேர்ந்த மருது (21). இவர்கள் நான்கு பேரும் காங்கேயம் ரோட்டில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மருது திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தாராபுரம் அமராவதி ஆற்றின் பாலம் வழியாக சென்றுள்ளார். அப்போது அமராவதி ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்த்ததும் ஆற்றில் இறங்கி குளிக்க ஆசை ஏற்பட்டது.

பின்னர் திண்டுக்கல்லில் விசேஷம் முடிந்ததும் திருப்பூருக்கு சென்ற மருது அமராவதி ஆற்றில் தண்ணீர் செல்லும் அழகையும், அதில் குளித்தால் நன்றாக இருக்கும் என்று தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து 2 மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேரும் திருப்பூரில் இருந்து தாராபுரம் வந்து அமராவதி ஆறு புதுப்பாலம் அருகே மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி உள்ளனர். பின்னர் அமராவதி ஆற்றில் அம்மாமடுவு பகுதியில் இறங்கி 4 பேரும் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ரவிவர்மனும், சுந்தரேசனும் திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உடனே அவர்கள் “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று கூச்சல் போட்டனர். உடனே அவருடைய மற்ற நண்பர்கள் அருகில் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்களிடம் உதவி கேட்டு கூச்சல் போட்டனர்.

உடனே வயலில் வேலை செய்து கொண்டிருந்த சிலர் ஓடிவந்து, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ரவிவர்மனையும், சுந்தரேசனையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். நல்லவேளையாக எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சரியான நேரத்தில் வயலில் வேலை செய்தவர்கள் ஓடிவந்து மீட்டதால் அவர்கள் இருவரும் உயிர் தப்பினார்கள். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் ஆற்றில் குளிக்க வந்த வாலிபர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து, 4 பேரையும் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.



Next Story