நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்தான எச்.ஏ.எல். நிறுவனத்தை மோடி அரசு அழிக்கிறது ராகுல் காந்தி குற்றச்சாட்டு


நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்தான எச்.ஏ.எல். நிறுவனத்தை மோடி அரசு அழிக்கிறது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 9:28 PM GMT)

“ரபேல் ஒப்பந்த முறைகேட்டின் மூலம் நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்தான எச்.ஏ.எல். நிறுவனத்தை மோடி அரசு அழிக்கிறது” என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

பெங்களூரு,

“ரபேல் ஒப்பந்த முறைகேட்டின் மூலம் நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்தான எச்.ஏ.எல். நிறுவனத்தை மோடி அரசு அழிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்து இருப்பதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார்.

ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு

ரபேல் ஒப்பந்தத்தின் மூலம் அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்.(ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட்) நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரபேல் போர் விமான தயாரிப்பு, பணி அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் அவர், அதன் ஒரு பகுதியாக நேற்று பெங்களூருவில் எச்.ஏ.எல். நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் தொழிலாளர்களை சந்தித்து உரையாடினார். பின்னர் அவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது:-

கேலிக்கூத்து

நவீன இந்தியாவின் கோவில்களாக கருதப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எச்.ஏ.எல். நிறுவனம் 78 ஆண்டுகள் அனுபவமிக்க நிறுவனம். நமது நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்து. விமானம் தயாரிப்புக்கான அனுபவம் உங்களிடம் உள்ளது. ஆனால், விமானம் தயாரிப்புக்கான அனுபவம் எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு இல்லை என்று மத்திய அரசு சொல்வது கேலிக்கூத்து. ரபேல் விமான தயாரிப்பு உங்களின் உரிமை.

விமான தயாரிப்பில் உங்களுக்கு அனுபவம் இல்லை என்று மத்திய அரசு சொல்வது உங்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கும் என்பதை நான் உணர்ந்து உள்ளேன். அதனால் நீங்கள் அடைந்துள்ள வலி, வேதனை எனக்கு தெரியும். இந்த நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள், நாட்டின் நலனில் அக்கறை உள்ள மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசு இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்காது என்பது எனக்கு தெரியும். அதனால் அவர்கள் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த சோதனையான நேரத்தில் நான் உங்கள் பக்கம் நிற்கிறேன்.

அழிக்கும் முயற்சி

இங்கு பேசிய தொழிலாளர்கள் ரபேல் விமானம் தயாரிக்கும் தகுதி திறமை எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு உள்ளது என்று தெரிவித்தனர். ராணுவத்துக்கான பொதுத்துறை நிறுவனத்தை அழிக்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. நாட்டிற்காக இந்த நிறுவனம் அபரிமிதமான பணிகளை ஆற்றி இருக்கிறது.

நாட்டை காக்கும் இந்த நிறுவனத்துக்கு நாடு கடமைப்பட்டு இருக்கிறது. வான்வெளி துறையில் எச்.ஏ.எல். நிறுவனம் சாதாரண அல்லது வழக்கமான ஒரு நிறுவனம் கிடையாது. இது நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்து.

நாங்கள் இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறோம். மத்தியில் ஆட்சி அமைக்கும்போது, எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு தீவிரமாக உதவி செய்வோம்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

ரூ.45 ஆயிரம் கோடி கடன்

பின்னர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு விமான தயாரிப்பில் அனுபவம் இல்லை என்று கூறுகிறார். ஆனால் அனில் அம்பானி நிறுவனத்தின் அனுபவம் குறித்து எதுவும் பேசவில்லை. இந்த முறைகேட்டை மூடி மறைக்கவே அவர் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். ஆனால், உண்மைகள் வெளிவந்து விட்டதால், மறைக்க முடியாது.

அனில் அம்பானி வாழ்நாளில் ஒரு விமானம் கூட தயாரித்ததில்லை. எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு கடன் எதுவும் இல்லை. அனில் அம்பானிக்கு ரூ.45 ஆயிரம் கோடி கடன் உள்ளது. எச்.ஏ.எல். நிறுவனம் 78 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அனில் அம்பானியின் நிறுவனம் 12 நாட்கள் மட்டுமே செயல்பட்டு உள்ளது. அதனால் அதன் அனுபவம் பற்றி அவர் பேசவில்லை.

தகுதி, அனுபவம் இருந்தும் ரபேல் விமான தயாரிப்பு பணி, ஏன் எச்.ஏ.எல். நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். எச்.ஏ.எல். நிறுவனம் நவீன இந்தியாவின் கோவில். ஊழலால் அது அழிக்கப்படுகிறது. ஊழல் மூலம் நரேந்திர மோடி அனில் அம்பானிக்கு உதவுகிறார். ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்து, அம்பானியிடம் கொடுத்துள்ளார். இப்பிரச்சினையில், நாடு முழுவதும் தெருதோறும் போராடுவோம்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்பமொய்லி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story