ஒப்பந்த பணிகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை: எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - தங்கதமிழ்செல்வன்


ஒப்பந்த பணிகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை: எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - தங்கதமிழ்செல்வன்
x
தினத்தந்தி 13 Oct 2018 11:00 PM GMT (Updated: 13 Oct 2018 9:48 PM GMT)

ஒப்பந்த பணிகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி,

ஒப்பந்த பணிகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டிக்கு வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுமார் ரூ.5 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான பணிகள் ஒப்பந்தம் விடுவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், இதில் மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.1,500 கோடி வீணாகியுள்ளது என்றும் 6 மாதத்திற்கு முன்பே நாங்கள் கூறினோம். 6 மாதம் கழித்து தற்போது தி.மு.க. தாமதமாக வழக்கு தொடர்ந்து இருக்கிறது. நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணையை பொறுத்திருந்து பார்ப்போம். மனசாட்சிபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யமாட்டார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க.வில் ஒரு பெண் முதல்-அமைச்சராக பதவியேற்பார் என்று கூறியிருப்பது, சசிகலாவை சூசகமாக கூறியிருப்பார். 33 வருடம் ஜெயலலிதாவுடன் இருந்தவர். அவர் வருவதில் தப்பில்லை.

எடப்பாடி பழனிசாமி பெயரில் பேரவை என்ற அமைப்பு தொடங்கியிருப்பது தவறு. அவர் அப்படி ஒன்றும் பெரிய தலைவர் இல்லை. இதுபோன்ற போஸ்டர் அடித்து ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பேரவை அமைக்கும் செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்று முதல்-அமைச்சர் அறிக்கை விடுத்து இருக்கவேண்டும். இந்த இரண்டையும் செய்யாததால் எடப்பாடி பழனிசாமி தற்பெருமைக்கு ஆளாகி வருகிறார் என்பது தெரிகிறது.

திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல்களை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு பயம் உள்ளது. எங்களுக்கு தெரிந்த வரையில் நாடாளுமன்ற தேர்தலோடு இந்த தேர்தல்கள் நடைபெறும். ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ. இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொகுதியில் பல்வேறு குறைகளை கூறி மக்கள் எனக்கு போன் செய்கின்றனர். அரசும் தொகுதி மக்களை கண்டுகொள்வதில்லை. எனவே தமிழக அரசை கண்டித்து ஆண்டிப்பட்டியில் மக்களை திரட்டி விரைவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். இதற்கான தேதியை விரைவில் அறிவிப்பேன் என்று அவர் கூறினார்.



Next Story