தமிழகத்தில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை சிதைந்து வருகிறது - ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் வேதனை


தமிழகத்தில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை சிதைந்து வருகிறது - ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் வேதனை
x
தினத்தந்தி 14 Oct 2018 4:18 AM IST (Updated: 14 Oct 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை சிதைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் பேசினார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடலூர் புதுக்குப்பம் காவலர் நல திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவின் தொடக்கமாக மாவட்ட முதன்மை நீதிபதி திலகவதி வரவேற்றார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் தலைமை தாங்கி, குடும்ப நல நீதிமன்ற கல்வெட்டை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 29-வது குடும்ப நல நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பழைய காலத்தில் இருந்தே நீதியும், சட்டமும் இருக்கிறது. அன்று கூட்டுக்குடும்பம் இருந்தது. அதனால் குடும்ப கட்டமைப்பு நன்றாக இருந்தது. வெளிநாட்டினர் பிரமிக்கும் வகையில் நமது கூட்டு குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. ஆனால் தற்போது கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை சிதைந்து வருவது வேதனையை தருகிறது. கூட்டுக்குடும்ப முறையை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு செல்வது வருத்தத்தை அளிக்கிறது.

குடும்ப தலைவர் மூலம் தீர்த்துக்கொண்ட பிரச்சினைகளை இன்று குடும்ப நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்கிறோம். இருப்பினும் பொதுமக்கள் நீதிமன்றத்தினை அணுகுவது நல்லதாகும். நீதிமன்றங்கள், வழக்குகள் அதிகரித்தாலும், மக்கள் தங்கள் பிரச்சினைகளை, உரிமைகளை பெற தைரியமாக முறையிடுகிறார்கள். மற்ற நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியாற்றும் முறைகளை விட இந்த நீதிமன்றத்தின் பணிகள் முற்றிலும் மாறுபட்டது. இதன் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டது. மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கான வக்கீல்கள், காவல் நிலையத்துக்கு செல்லாமல் குடும்ப நல நீதிபதியிடம் நேரிடையாக சென்று பேசி தீர்த்து கொள்ளலாம். இதன் மூலம் தங்கள் பிரச்சினை வெளியே தெரிவதில்லை. வக்கீல்களும் இந்த பிரச்சினையில் தலையிட கூடாது. ஆகவே வழக்குகள் வருவதற்கு முன்பாக பேசி தீர்த்துக்கொள்ள இந்த நீதிமன்றம் வழிவகை செய்கிறது. உங்களுடைய எந்தவொரு பிரச்சினையானாலும் நீதிபதிகளை அணுகலாம். அவர்கள் பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பார்கள் என்று அவர் பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசுகையில், வளர்ந்து வரும் சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப குடும்ப நல நீதிமன்றம் நல்ல தீர்வு காண வேண்டும். தமிழ் சமுதாயத்தில் குடும்ப நலம் காக்கப்பட வேண்டும். குடும்ப நலனில் மாவட்ட மக்கள் அக்கறையுடன், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மேலும் இந்த குடும்ப நல நீதிமன்றத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கண்டு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என்றார்.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பார் அசோசியேஷன் சங்க தலைவர் மாசிலாமணி, வக்கீல்கள் சங்க தலைவர் சிவராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மகளிர் கோர்ட்டு நீதிபதி லிங்கேஸ்வரன், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் இளவரசன், சண்முகசுந்தரம், சார்பு நீதிபதிகள் தமிழரசி, பிரபாவதி, குடும்ப நல நீதிபதி மகாலட்சுமி, 2-வது கூடுதல் சார்பு நீதிபதி மூர்த்தி, முதன்மை சார்பு நீதிபதி பரமேஸ்வரி, மாஜிஸ்திரேட்டுகள் கோபாலக்கண்ணன், அன்வர்சதாத், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி சுந்தரம் மற்றும் நீதிபதிகள், தமிழ்நாடு- புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு இணை செயலாளர் பிரேம்குமார், வக்கீல்கள் சீத்தாராமன், வனராசு, சிவமணி, முகுந்தன், திருமேனி, நந்தகுமார், உள்பட வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி நன்றி கூறினார்.



Next Story