பெரம்பூரில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விநாயகர் கோவில் முகப்பு அலங்கார வளைவு இடித்து அகற்றம்


பெரம்பூரில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விநாயகர் கோவில் முகப்பு அலங்கார வளைவு இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:24 AM IST (Updated: 14 Oct 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பூரில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விநாயகர் கோவில் முகப்பு அலங்கார வளைவு மற்றும் இரும்பு மேற்கூரை ஐகோர்ட்டு உத்தரவின்படி பொக்லைன் எந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

பெரம்பூர்,

சென்னை பெரம்பூர் முருகேசன் தெருவில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்புறம் இரும்பு மேற்கூரையும், கோவிலுக்கு அருகில் முகப்பு அலங்கார வளைவும் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த இரும்பு மேற்கூரை மற்றும் அலங்கார வளைவு போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக சிலர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இடித்து அகற்ற உத்தரவு

வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கோவில் முகப்பு அலங்கார வளைவு மற்றும் இரும்பு மேற்கூரையை இடித்து அகற்றும்படி சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் 6-வது மண்டல அதிகாரி ஆனந்தகுமாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று மண்டல செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர் சரோஜா, உதவி பொறியாளர்கள் கோபிநாத், சரஸ்வதி ஆகியோர் செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாதன், தமிழ்வாணன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அங்கு வந்தனர்.

எதிர்ப்பு

பின்னர் முகப்பு அலங்கார வளைவு மற்றும் இரும்பு மேற்கூரையை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து மாநகராட்சி மண்டல அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த 20 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பின்னர் கோவில் முன்பு உள்ள முகப்பு அலங்கார வளைவு மற்றும் இரும்பு மேற்கூரை முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story