மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இருக்கும் போது கவர்னர் தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும் - சரத்குமார்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இருக்கும்போது கவர்னர் தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்று சிவகிரியில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
சிவகிரி,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சிவகிரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
குற்றம் நிரூபிக்கப்படாமல் தமிழக முதல்–அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறுவது தவறு. இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அப்போது தான் நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அதே போல் எங்கள் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பெண்கள் மதிக்கப்படவேண்டும். அவர்களை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவது கண்டிக்கத்தக்கது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியம் குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறந்த சமூகம் படைப்பதே எங்கள் நோக்கம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இருக்கும் போது கவர்னர் தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஜனாதிபதி மத்திய ஆட்சியில் ஆய்வு செய்தால் ஏற்றுக்கொள்வார்களா?
பெட்ரோல் டீசல், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலையை வரவேற்கிறேன். ஏற்கனவே அவர்கள் தண்டனையை அனுபவித்து விட்டார்கள். நான் பலமுறை தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்துள்ளேன். மேலும் டிசம்பருக்கு பிறகு ஜனவரியில் 234 சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.
முன்னதாக சரத்குமார் சிவகிரி கடைவீதி பகுதியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து நடந்த கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் சின்னுச்சாமி, மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் துணை பொது செயலாளர்கள் சண்முக சுந்தரம், ஈஸ்வரன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் சாமுண்டிபோஸ், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் குருநாதன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கொடுமுடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பொன்முத்து நன்றி கூறினார்.