கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய அலுவலக கட்டிடங்கள்; அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்


கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய அலுவலக கட்டிடங்கள்; அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 15 Oct 2018 4:00 AM IST (Updated: 14 Oct 2018 7:52 PM IST)
t-max-icont-min-icon

திருவாடானை யூனியனில் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய அலுவலக கட்டிடங்களை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்.

தொண்டி,

திருவாடானை யூனியன் அஞ்சுகோட்டை,தொண்டி வட்டாணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். வெள்ளையபுரம் கூட்டுறவு சங்க தலைவர் மதிவாணன் முன்னிலை வகித்தார்.அனைவரையும் கூட்டுறவு இணைப் பதிவாளர் முருகேசன் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் மணிகண்டன் புதிய கூட்டுறவு சங்க அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது:– தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் நடந்துவரும் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களின் தேவைகளை அறிந்து நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 2 தாலுகாவில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் தோட்டாமங்கலம், அஞ்சுகோட்டை,வட்டாணம், தொண்டி ஆகிய இடங்களில் தலா ரூ. 20 லட்சத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களின் புதிய அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு உள்ளன.

இந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கு கடன் உதவிகளை வழங்கி வாழ்வாதாரம் உயர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் அதிகாரிகள் பொதுமக்களை தேடிச்சென்று அரசின் திட்டங்களை வழங்கி வருகின்றனர். சுமார் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழக அரசிடம் கேட்டு மாவட்டத்திற்கு வைகை தண்ணீரை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் சுமார் 64கண்மாய்கள் நிரம்பிஉள்ளன.பரமக்குடி,ராமநாதபுரம்,திருவாடானை தொகுதி மக்கள் பெரிதும் பயன் அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி,விமான நிலையம் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை உள்ள இடங்களில் உரிய நடவடிக்கை மூலம் உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் மக்களின் தேவைகளை தீர்க்க தொகுதிக்கு வருவது இல்லை. இதனால் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் இனி வரும் காலங்களில் இந்த தொகுதியையும் எனது தொகுதியாக கருதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் இந்தியாவில் சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story