இலங்கைக்கு மாத்திரைகள் கடத்த முயன்ற வழக்கு தலைமறைவாக இருந்த மீனவர் கைது


இலங்கைக்கு மாத்திரைகள் கடத்த முயன்ற வழக்கு தலைமறைவாக இருந்த மீனவர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2018 4:30 AM IST (Updated: 14 Oct 2018 9:33 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வழியாக இலங்கைக்கு மாத்திரைகள் கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மீனவர்கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இடிந்தகல்புதூர் கடற்கரை பகுதியில் இருந்து கடந்த ஜூன் மாதம் 11–ந் தேதி இரவு படகில் கள்ளத்தனமாக இலங்கைக்கு மர்ம பொருள் கடத்த முயன்றனர். இதனை தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் பிடிக்க முயன்றபோது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

படகில் 149 பெட்டிகளில் ஒரு லட்சத்து 49 ஆயிரம் சக்திவாய்ந்த வலிநிவாரண மாத்திரைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட நிலையில் இலங்கைக்கும், அங்கிருந்து தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் கடத்த திட்டமிட்டு இருந்ததை அறிந்து அவற்றை கியூபிரிவுபோலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான விசாரணையில் இடிந்தகல்புதூர் செல்லம் மகன் இருளாண்டி என்பவர் படகை ஓட்டி செல்ல முயன்றது தெரிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதன்பின்னர் இந்த வழக்கு ராமநாதபுரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவிற்கு மாற்றப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கீழக்கரை தெற்குத்தெரு முகம்மதுஅப்துல் மரைக்காயர் என்பவரின் மகன் ஒட்டகம் நூர்முகம்மது(வயது67) என்பவர்தான் சென்னையில் இருந்து இந்த மாத்திரைகளை வாங்கி வந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்தது தெரிந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரை கீழக்கரையில் போலீசார் கைதுசெய்தனர்.

இந்த வழக்கில் மாத்திரைகளை படகோட்டியான இருளாண்டி மூலம் படகில் கொண்டு சென்று தீவு பகுதியில் வைத்து இலங்கை ஏஜென்டிடம் கைமாற்ற முயன்றது திருப்புல்லாணி அருகே உள்ள காஞ்சிரங்குடி பக்கீர்அப்பாதர்கா மீனவர் காலனி மீனவர் செல்வம்(42) என்பது தெரிந்தது. போலீசாரிடம் சிக்காமல் பலமாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த செல்வம் திருப்புல்லாணிக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, ஏட்டுகள் சுப்பிரமணியன், சந்திரசேகர் ஆகியோர் திருப்புல்லாணி பஸ்நிலைய பகுதியில் வைத்து செல்வத்தை கைது செய்தனர். பின்னர் அவர், ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். லட்சக்கணக்கான மாத்திரைகள் கடத்த முயன்ற வழக்கில்அனைவரையும் கைதுசெய்த போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரை ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் பாராட்டினார்.


Next Story