தாராபுரத்தில் கன மழைக்கு 11 வீடுகள் சேதம்; கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது


தாராபுரத்தில் கன மழைக்கு 11 வீடுகள் சேதம்; கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 14 Oct 2018 10:15 PM GMT (Updated: 14 Oct 2018 4:38 PM GMT)

தாராபுரத்தில் பெய்த கனமழைக்கு 11 வீடுகள் சேதம் அடைந்தன. அத்துடன் அங்காளம்மன் கோவிலுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக்காற்றும் பலமாக வீசியது. இதன் காரணமாக பல வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

குறிப்பாக தாராபுரம் பழைய கோட்டை மேடு பகுதியில் வசிக்கும் காளீஸ்வரி, சாவித்திரி, பழனியம்மாள், சின்னத்துரை ஆகியோரின் வீடுகளின் மேற்கூரைகள் சூறைக்காற்றால் சேதமடைந்து விழுந்தன. அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிலருக்கு உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுபோல் பலத்த மழை காரணமாக அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், நஞ்சியம்பாளையத்தை சேர்ந்த பழனியம்மாள், கனிமொழி, மணி, பூளவாடி ரோடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பொன்னியம்மாள், பழைய நாடார் தெருவை சேர்ந்த பூங்கொடி, டி.குமாரபாளையத்தில் ஒருவீடு மற்றும் கிராமப்புறங்களில் சிலர் வீடுகள் உள்பட 11 பேரின் வீடுகள் சுவர் இடிந்து சேதம் அடைந்தன.

இது பற்றிய தகவல் அறிந்ததும் தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரிகள் சந்திரசேகர், மனோரஞ்சிதம் ஆகியோர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களான பழனியம்மாள், கனிமொழி, பொன்னியம்மாள், மற்றொரு பழனியம்மாள், மணி, பூங்கொடி ஆகிய 6 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது.

தாராபுரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தாராபுரம் சோழக்கடை வீதியில் தாழ்வான பகுதியில் இருந்த அங்காளம்மன் கோவிலுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. கோவிலுக்குள் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழை வெள்ளம் கோவில் கருவறை வரை சென்றது. இதனால் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர். மேலும் சில பக்தர்கள் கோவிலுக்குள் செல்லாமல் திரும்பிச்சென்றனர். அதன் பின்னர் நேற்று மழை வெள்ளம் வடிந்து சீரானது.


Next Story