மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில்முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்


மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில்முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 15 Oct 2018 3:45 AM IST (Updated: 14 Oct 2018 10:23 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிக்காடு கடற்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது. போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

மாமல்லபுரம்,

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிக்காடு கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். சென்னை புறநகர் பகுதியில் இருந்து ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று இவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, கன்னியப்பன் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிக்காடு பஸ் நிறுத்தம் வரை சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் கைரேகைகளை தடயமாக சேகரித்தனர். ஆட்டோவில் ஒரு கும்பல் வந்ததாகவும் அவர்கள்தான் இவரை கொலை செய்து இங்கு வீசிவிட்டு சென்று இருக்கலாம் என சூளேரிக்காடு மீனவ கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை தற்போது குற்றவாளிகளை பிடிக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு போலீசார் குற்றவாளிகளை தேடி சென்றுள்ளனர்.

Next Story