சபரிமலை தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம்


சபரிமலை தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 15 Oct 2018 4:30 AM IST (Updated: 14 Oct 2018 11:59 PM IST)
t-max-icont-min-icon

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்கிற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யக்கோரி கரூரில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

கரூர்,

ஆண்– பெண் பாகுபாடின்றி வழிபாட்டில் பாலின சமத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை சுட்டி காட்டி, கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு அய்யப்ப பக்தர்கள், பொதுமக்களிடையே வரவேற்பும், எதிர்ப்பும் பெற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எனினும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சபரிமலையில் ஆகமவிதியை மீறுவது ஏற்புடையதல்ல என்றும், மாதவிடாய் காலங்களில் பெண்கள் விரதம் கடைபிடித்து சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு இயல்பாக உடலில் ஏற்படும் மாற்றத்தில் சிக்கல் ஏற்படக்கூடும் என கூறி தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யக்கோரி கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அந்த வகையில் கரூர் மாவட்ட அகில பாரதிய அய்யப்பதர்ம பிரசாரசபா சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாநில பொது செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட தலைவர் ரகுநாதன், பொருளாளர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பின் ஆலோசகர் குணசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.


இந்த போராட்டத்தின்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய போதிலும் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு உரிமை கிடைத்து விட்டதாக எண்ணி சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள். எனவே அந்த கோவிலின் புனிதத்தை காத்திடும் வகையில் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட்டு முன்வர வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும் வழக்கத்தை மீறி பெண்களை சபரிமலைக்கு அனுப்பினால் அவர்களது பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுகிறது. எனவே சபரிமலை ஆகமவிதியை மதித்து நாங்கள் 50 வயதுக்கு மேல் தான் சபரிமலைக்கு செல்வோம் என உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பெண்கள் உறுதிமொழியேற்றனர். இந்த போராட்டத்தின் போது, அய்யப்பனின் உருவப்படத்திற்கு குருசாமிகள் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story