வாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும்


வாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Oct 2018 3:45 AM IST (Updated: 15 Oct 2018 12:04 AM IST)
t-max-icont-min-icon

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்துள்ளார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர், ஆலந்தூர், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான சிறப்பு முகாமில் தி.மு.க. முகவர்களின் செயல்பாடு குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுமான மா.சுப்பிரமணியம், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் மா.சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, “ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் குறைந்தபட்சம் 100 வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் பெயர்களும் நீக்கப்படவில்லை. இறந்தவர்களின் ஆதாரங்கள் தந்தும் தேர்தல் அலுவலர்கள், அந்த பெயர்களை நீக்கவில்லை. இறந்து போனவர்களின் பெயர்கள், ஒரே தொகுதிகளில் ஒரே வாக்காளரின் பெயர்கள் 2 முறை இடம்பெற்று இருப்பது என 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக உள்ளது. தேர்தல் ஆணையம் செலவு செய்து வாக்காளர் பட்டியலை சரி செய்தாலும் முழுமையாக சரி செய்யவில்லை. இந்த பணியை முழுமையாக செய்ய வேண்டும்” என்றார்.

அவருடன் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் மணிமாறன், பகுதி செயலாளர் என்.சந்திரன், பி.குணா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கோல்டு பிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story