தாய் இறந்து விட்டதாக போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி; மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு
திருவாடானை அருகே தாய் இறந்துவிட்டதாக போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி செய்தது தொடர்பாக மகன் உள்பட 4 பேர் மீது போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா,கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி பூச்செண்டு (வயது 66). அதே ஊரில் வசித்து வரும் இவர்களது மகனான சிவக்குமார், தந்தை துரைராஜ் பெயரில் உள்ள நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு விற்றுள்ளார்.
அதற்காக அரசு முத்திரை, தாசில்தார் கையொப்பத்துடன் போலி வாரிசு சான்று ஆவணம் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த வாரிசு சான்றிதழில் உயிரோடு உள்ள இவரது தாயார் பூச்செண்டு இறந்து விட்டதாகவும் அதில் சிவக்குமாரின் சகோதரிகள் இருவர் வாரிசு என்பதை மறைத்தும் தொண்டி பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தாராம்.இதனை அறிந்த பூச்செண்டு புகார் செய்ததின் பேரில் போலி ஆவணங்கள் அளித்து பதிவு செய்யப்பட்ட பத்திர பதிவை தொண்டி சார்பதிவாளர் ரத்து செய்துள்ளார்.
இதை அறிந்து ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், பூச்செண்டுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பூச்செண்டு திருவாடானை போலீசில் அளித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி கடம்பூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், ரவிச்சந்திரன், பால்சாமி, காசிராமன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் சிவக்குமார் பத்திர பதிவு செய்ய பயன்படுத்தியுள்ள ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.